12/30/2012

| |

இலங்கைக் கலைஞர் ''உபாலி'' செல்வசேகரன் காலமானார்

இலங்கையின் பிரபல கலைஞரான ''உபாலி'' செல்வசேகரன் அவர்கள் கொழும்பில் காலமானார்.
இலங்கையில் திரைவானில் எழுபதுகளில் பிரபலமாகப் பேசப்பட்ட கோமாளிகள் என்னும் ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்ப்படத்தில் சிங்கள பாணியில் தமிழ் பேசும் ''உபாலி'' என்ற பாத்திரத்தில் நடித்து, பிரபலமாகி, பலராலும் மெச்சப்பட்டவர் செல்வசேகரன்.
பலதுறைக் கலைஞராகத் திகழ்ந்த செல்வசேகரன் அவர்கள் தனது 64 வது வயதில் காலமானார்.வானொலி, மேடை, தொலைக்காட்சி முதல் திரைப்படம் வரை இலங்கையின் அனைத்து ஊடகங்களிலும், இலங்கையின் இரு மொழிகளிலும் முத்திரை பதித்த செல்வசேகரன், தினகரன் நாளிதழின் சிறந்த நடிகருக்கான விருது மற்றும் சரசவிய விருது போன்ற பெருமைக்குரிய விருதுகளைப் பெற்றவர் என்று நினைவு கூர்கிறார் அவரது சக கலைஞரும், நெருங்கிய நண்பருமான பிரபல அறிவிப்பாளர் பி எச் அப்துல் ஹமீத்.
நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்களில் நடித்த இவர் இலங்கையில் ஏறாத மேடையில்லை என்றும் ஹமீத் கூறுகிறார்.
தமிழ், சிங்கள திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இரு மொழி ரசிகர்களையும் இவர் வெகுவாக கவர்ந்திருந்தார்.
தனது இறுதிக் காலத்தில் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் பல மேடைகளில் ஏறி அனைவருக்கும் இவர் நகைச்சுவை விருந்து வழங்கியிருக்கிறார்.