12/08/2012

| |

பாசிச புலிகளின் முன்னாள் தளபதி லெப்.கேணல்.திலீபன் நினைவுச் சின்னம் அழிப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் நினைவுச் சின்னம் அடையாளம் தெரியாதவர்களினால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினராகிய திலீபன் இந்திய அமைதிப்படை இலங்கையின் வடபகுதியில் நிலைகொண்டிருந்த போது, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் பேச்சுவார்த்தைகளுக்காக சமாதானம் நிலவிய காலத்தில் திலீபனின் நினைவாகத் தூபியொன்று நல்லூர் ஆலயப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நினைவுத் தூபியே வியாழனிரவு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்லைக்கழக விவகாரம், மாணவர்களின் வகுப்புப் புறக்கணிப்பு, தொடர்ச்சியாகப் பலர் கைது செய்யப்படுவது போன்ற அமைதியற்ற சூழலின் பின்னணியில் திலீபனின் நினைவுத் தூபி நொறுக்கப்பட்டுள்ளமையானது, அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகவே அங்குள்ளவர்களினால் கருதப்படுகின்றது.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்
இதற்கிடையில், கைது செய்யப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீட ஆசிரியர் சங்கத்தினர் பல்கலைக்கழக வளாகத்தினுள் போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றார்கள்.
ஏற்கனவே மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்படாத நிலையில், தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்ட மாணவர்களில் சிலரை பொலிசாரிடம் பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்படைத்ததையும் மிகுதி மாணவர்களை அவ்வாறு ஒப்படைப்பதற்கு முயற்சிப்பதையும் கண்டிப்பதாக விஞ்ஞானபீட ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இத்தகைய சம்பவங்களைக் கண்டித்தும், எதிர்காலத்தில் மாணவர்களின் கைதுகளைத் தடுக்கக் கோரியுமே இன்றைய போராட்டம் நடைபெற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலைமை குறித்து பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தினர் கூடி ஆராய்ந்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய பல்தரப்பு பிரதிநிதித்துவ குழுவொன்றை அமைத்து செயற்படுவதற்கு இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக துணை வேந்தரின் தலைமையில் பலமுள்ள ஒரு குழுவாக, அரச உயர் மட்டத்துடன் தொடர்புகொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் செயற்படுவது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.