1/30/2013

| |

மட்டக்களப்பு 37741 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி –மாவட்ட செயலகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 37741 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள் இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் மற்றும் வாழ்வாதார திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் 1679 மில்லியன் ரூபா மாவட்ட செயலகம் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அமைச்சுக்கள் மூலமாக 36062 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனடிப்படையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஊடாக 8000 மில்லியன் ரூபாவும், வீதி அபிவிருத்தி அமைச்சு ஊடாக 4000 மில்லியன் ரூபாவும், மின்சார எரிபொருள் துறை அமைச்சு ஊடாக 120 மில்லியன் ரூபாவும், நீர் வழங்கள் வடிகால் அமைப்பு அமைச்சு ஊடாக 11000 மில்லியன் ரூபாவும்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்தார்.
வாழ்வாதாரம், நீர்ப்பாசனம், கல்லடிப்பாலம், மண்முனைத்துறைப் பாலம், சுற்றாடல் அபிவிருத்தி, நீதி மன்ற அபிவிருத்தி, வாழ்வாதார மேம்பாடு உட்பட பல்வேறு துறைகளும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் வறுமை நிலையில் முதல் இடத்தில் உள்ள நிலையில் திவிநெகும திட்டத்தின் வளமான இல்லம் திட்டத்தின் ஊடாக பல்வேறு வறுமை ஒழிப்பு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் மக்கள் இவற்றினை சிறந்த முறையில் கடைப்பிடிப்பதன் மூலமே இந்த மாவட்டத்தில் இருந்து வறுமையை ஒழிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.