1/19/2013

| |

இன்று மட்டக்களப்பில் முழுஅளவிலான கடையடைப்புப் போராட்டம்

வாகனேரி, புனானை முதலிய தமிழ் கிராமங்களை முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்;டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தின்  தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் முழுஅளவிலான கடையடைப்பு எதிர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் நகரப்பகுதி, மயிலம்பாவளி, ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை, செங்கலடி, கொம்மாதுறை, வந்தாறுமூலை, மாவடிவேம்பு, சித்தாண்டி, சந்திவெளி, கிரான், வாழைச்சேனை, வாகரை முதலிய பிரதேசங்களில் மக்கள் அமைதியாகவும் தமது அன்றாட வியாபார நடவடிக்கை ஸ்தலங்களை அடைத்தும் பயணங்களைத் தவிர்த்தும் முஸ்லிம் பிரதேச செயலகங்களுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற இன்றைய அமைதிப் போராட்டத்தின்போது, வீதிகளில் போக்குவரத்துகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்ததுடன், பாடசாலைகளில் மாணவர்கள் வரவின்மையினால் பாடசாலைகள் வெறிச்சோடியிருந்தமையினையும் அவதானிக்கமுடிந்தது. மற்றும் அரச அலுவலகங்களில் பணியாளர்கள் வரவின்மையினால் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் நில அபகரிப்புக்கெதிரான போராட்டத்தை மிகவும் அமைதியாக இருந்து, டயர் எரித்தல் முதலிய அரச சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படுத்ர்ம் நடவடிக்கைகளை தவிர்த்து மிகவும் நேர்மையான வழியில் முன்னெடுத்துள்ளமை இங்கு அவதானிக்கத்தக்கது. எனவே தமது நிலஅபகரிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் மீண்டும் தமது எதிர்ப்புப் போராட்டங்களை மேற்கொள்ளாதவாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த காணி அபகரிப்பு விடயத்தை அணுகி , எந்த இனமும் பாதிக்கப்படாத வண்ணம் ஒற்றுமை நிலவுவதற்கு முனையவேண்டும்.
சமாதானம் துளிர்விட்டு அனைத்துஇனமும் ஒன்றாக வாழக்கூடிய நிலையை எமது நாட்டு ஜனாதிபதி ஏற்படுத்தியிருக்கும் இவ்வேளையில், அதனைச் சீர்குலைப்பதற்கு முனையாமல் அந்த நல்லநிலமையை தொடர்ந்தும் வளர்த்தெடுத்துக்கொள்ளவேண்டும்.