1/15/2013

| |

ஒருபால் திருமணத்திற்கு எதிராக பிரான்ஸில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

தன்னினச்சேர்க்கையாளர்களின் திருமணத் திற்கு சட்ட, அங்கீகாரம் வழங்கும் பிரான்ஸ் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தலைநகர் பாரிஸில் நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர்கள், கத்தோலிக்க ஆலயம் மற்றும் பிரான்ஸ் முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் நாடுபூராகவும் இடம்பெற்றுள்ளது. இதில் பாரிஸ் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சுமார் 340,000 பேரளவில் பங்கேற்றதாக பொலிஸார் கணித்துள்ளனர்.
கடந்த 1984 ஆம் ஆண்டு பிரான்ஸில் நடந்த கல்விப் போராட்டத் திற்குப் பின்னர் இடம்பெற்ற பாரிய மக்கள் ஆர்ப்பாட்டம் இதுவாகும். பிரான்ஸ் அரசு கொண்டு வந்திருக்கும் அனைவ ருக்குமான திருமணம் என்ற சட்டமூலத்தை எதிர்க்கும் வகையில் அனைவரினதும் ஆர்ப்பாட்டம் என இந்த எதிர்ப்பு ஊர்வலத்திற்கு பெயரிடப் பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டம் பாரிஸின் மூன்று முக்கிய பகுதிகளூடாக இடம்பெற்றது. இறுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘ஈபிள் டவர்’ முன் ஒன்றுகூடினர்.
ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலாண்டே கடந்த ஆண்டு தனது தேர்தல் பிரசாரத்தில் தன்னினச் சேர்க்கையாளர் திருமணத்தை அங்கீகரிக்கவும் அவர்கள் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கும் சட்ட அங்கீகாரம் வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார். இதன்படி கொண்டுவரப் பட்ட சட்ட மூலத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு எதிர்வரும் ஜூனில் அதனை சட்டமாக்க திட்டமிடப் பட்டுள்ளது.
“பிரான்ஸ் சகிப்புத்தன்மைகொண்ட நாடு என்றாலும் புதிய சட்டம் குடும்ப முறை மற்றும் சிறுவர் பாதுகாப்பிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்” என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மதநூல் பிரசாரகர்களின் தேசிய கவுன்ஸிலின் துணைத் தலைவர் டானியல் லிச்டி குறிப்பிட்டார். உலகில் தன்னினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு பெல்ஜியம், போர்த்துக்கல், நெதர்லாந்து, ஸ்பைன், ஸ்வீடன், நோர்வே மற்றும் தென்னாபிரிக்கா உட்பட 11 நாடுகள் அங்கீகாரம் அளித்து ள்ளன. அமெரிக்காவின் 9 மாநிலங்களில் ஒரு பால் திருமணத்திற்கு சட்ட அனுமதி உண்டு.