1/24/2013

| |

தமிழரசு கட்சியை பலப்படுத்த வேண்டுமென முயற்சிப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒழிப்பதற்கு சமனாகும்.

வீ.ஆனந்தசங்கரி
காலத்தின் தேவைக்கமைய தமிழரசுக்கட்சி, தமிழ்காங்கிரஸ், ஈபி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கியமாக செயற்படும் நோக்கத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு புத்துயிரளிக்கப்பட்டது. இக்கட்சிகள் அனைத்தும் சம பலத்துடனேயே இணைந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமையால் வேறு வழியின்றி தமிழரசு கட்சியின் வீட்டுச்சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட்டனவே அன்றி அன்றைய நிலையில் தமிழரசுக் கட்சிக்கு தனித்துவம் இருக்கவில்லை. தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தனரே அன்றி தமிழரசுக்கட்சிக்கல்ல. இந்த அடிப்படையிலேயே மக்கள் செயற்பட்டதும், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்படுமாறும் அழுத்தம் கொடுத்தனர். சந்தர்ப்ப சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமது சுயநோக்கத்திற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் வெற்றிபெற்ற கூட்டுக்கட்சிகளின் வேட்பாளர்களை தமிழரசு கட்சியில் இணைத்தமையை பொதுமக்கள் கண்டித்துள்ளனர். தமிழரசுக்கட்சியின் இத்தகைய போக்கை தடுத்து நிறுத்தாது அவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் திரு. சம்பந்தன் அவர்கள் தமிழரசுக்கட்சியை பலப்படுத்த வேண்டும் என விடுத்திருக்கும் கோரிக்கை அமைகிறது. இது தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தாய் கட்சியாக தமிழ் தேசிய  கூட்டமைப்பும், அதில் இணைந்துள்ள கட்சிகள் அனைத்தும் அதன் அங்கங்களேயாகும். சில சுயநலவாதிகளால் குட்டையை குழப்பி பருந்துக்கு இரையாக்காது தடுக்க திரு.சம்பந்தன் அவர்கள் செயற்பட வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்காகவே தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகியன முன்வந்ததேயொழிய தமிழரசுக் கட்சியில் இணைந்து செயற்படுவதற்காக அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற ஓர் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியை பலப்படுத்த வேண்டுமென்ற திரு. சம்பந்தன் அவர்களின் கோரிக்கைக்கு மக்கள் சார்பில் வரும் பதிலே இதுவாகும். 2004ம் ஆண்டுக்குப்பின் நடந்தேறிய அத்தனை தேர்தல்களிலும் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களித்துள்ளனர் என்பதே உண்மையான நிலைப்பாடாகும்.