1/11/2013

| |

யோகா கலைக்கு முதன் முறையாக கலாபூசனம் - பெருமைபெற்றுத்தந்த மட்டக்களப்பு பெருமகன்

இலங்கையில் முதன்முறையாக யோகாசனக்கலையை வளர்க்கும் ஒருவருக்கு கலாபூசனம் விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் யாரும் அல்ல எமது மட்டக்களப்பை சேர்ந்த யோகா ஆசானும் சித்த வைத்தியருமான துரையப்பா செல்லையாவுக்கே அந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறையினருக்கு வருடந்தோறும் கலாசார மரபுரிமைகள் அமைச்சினால் இந்த விருது வழங்கப்பட்டு வந்த போதிலும் முதன் முறையாக யோகா கலையை போதித்துவரும துரையப்பா செல்லையாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
துறைநீலாவணையை பிறப்பிடமாகக்கொண்ட இவர் சுமார் 28 வருடமாக இந்த யோகாசனக்கலையை மட்டக்களப்பு மாவட்டம் உட்பட உலகமெங்கும் போதித்துவருகின்றார்.இவரது மாணவர்களினால் சர்வதேச ரீதியில் யோகாசனக்கிளைகள் அமைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
இவ்வாறான பல சிறப்பை பெற்றுத்தந்த இவரை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை(08.01.2013) பிற்பகல் கூழாவடி இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
யோகா ஆரோக்கிய நிலையத்தின் ஏற்பாட்டில் அதன் உப தலைவர் என்.தீபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மாவட்ட கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர் கே.ரவீந்திரன்,சித்த வைத்தியரும் சமாதான நீதவானுமான நடராசா,சமூக சேவையாளர் செல்வேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்புக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் முழு தமிழினத்துக்கும் பெருமை சேர்ந்ததுரையப்பா செல்லையாவை அதிதிகள் கௌரவித்ததுடன் மாணவர்களும் கௌரவத்து ஆசிபெற்றனர்.
ஆதனைத்தொடர்ந்து துரையப்பா செல்லையா ஆற்றிவரும் பணிகள் அவரின் சிறப்புக்கள் பற்றிய உரைகள் இடம்பெற்ற. இந்நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.