1/14/2013

| |

பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கம் ஜனாதிபதியின் உத்தரவுக் கடிதம் ~pராணியிடம் நேற்று கையளிப்பு

பிரதம நீதியரசர் பதவியிலிருந்து கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்காவை நீக்குவதற்கான உத்தரவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று 13 ஆம் திகதி காலையில் கையெழுத்திட்டார்.
ஜனாதிபதிஅவர்கள் கையெழுத்திட்ட அந்த உத்தரவு பிரதம நீதியரசரின் உத்தியோக வாசஸ்தலத்தில் வைத்து கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்காவிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்கா நேற்று தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவரும், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரி ஒருவரும் இந்த உத்த ரவை எடுத்துச் சென்று அவரிடம் கையளித்ததாகவும் அவர் கூறினார்.
அரசியல் யாப்பின் 107 (02) பிரிவின் கீழ், ஜனாதிபதி இந்நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியல் குற்றப் பிரேரணை மூலம் பதவி நீக்கப்படும் முதலாவது பிரதம நீதியரசராக ஷிராணி விளங்குகிறார்.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவின் செயற்பாடுகள் தொடர்பாக 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு குற்றப் பிரேரணையை கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கையளித்தனர்.
அப்பிரேரணை நவம்பர் 6 ஆம் திகதி பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் 11 பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய தெரிவுக் குழுவொன்றை நியமித்தார். அக்குழுவில் ஏழு எம்.பிக்கள், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், நால்வர் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்கள். இத்தெரிவுக்குழு தனது விசாரணை அறிக்கையை டிசம்பர் 8 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளித்தது.
பிரதம நீதியரசருக்கு எதிராக முன் வைக்கப்பட்ட 14 குற்றச் சாட்டுகளில் ஐந்தை விசாரணை செய்த இத்தெரிவுக்குழு, மூன்று குற்றச்சாட்டுக்களில் பிரதம நீதியரசர் குற்றவாளி என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட் டியுள்ளது. 01, 03, 04 ஆகிய இலக்கக் குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட வாய் மூல மற்றும் எழுத்து மூல சட்சியங்களின் அடிப்படையில் குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவுக் குழு முடிவு செய்தது.
இது தொடர்பான அறிக்கையும் குழு வினரால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
இதனடிப்படையில் அரசியல் குற்றப் பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதம் ஜனவரி மாதம் 10 ஆம் 11 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்டது. இவ்விவாதத்தின் இறுதி நாளான 11 ஆம் திகதி இரவு வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. வாக்கெடுப்பில் குற்றப் பிரேரணைக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன் படி 106 மேலதிக வாக்குகளால் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை சபையில் நிறைவேறியது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் இக் குற்றப் பிரேரணை சபையில் நிறைவேற்றப்பட்டதுடன் அது தொடர்பாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.
இதன் அடிப்படையிலேயே ஜனாதிபதி, பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஷிராணி பண்டாரநாயக்காவை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.