2/20/2013

| |

மட்டக்களப்பு நகர அழகுபடுத்தல் திட்டடம் வேகம் பெறுகிறது.

மட்டக்களப்பு நகர அழகுபடுத்தல் திட்டத்தின் கீழ் நகரின் மத்தியிலுள்ள பிரதான மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டத்தின் வேலைகள் இன்று ஆரம்பமாகியன. அத்துடன் அந்த சுற்றுவட்டத்தில் இருந்த காந்தி சிலையும் அகற்றப்பட்டு பிரிதொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ்; நகரின் மத்தியில் உள்ள காந்தி சதுக்கம், காந்தி பூங்காவாக மாற்றம்பெறுகிறது. தேசத்தின் மகுடம் (தெயட்ட கிருள) வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த அபிவிருத்தி திட்டத்துக்கென 38.301 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தினை மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன.
இதில், மட்டக்களப்பு மாநகர சபை 1.98 மில்லியன் ரூபாய்க்கு வீதி அபிவிருத்திக்கான வேலைகளையும் சிலைகள் நிறுவுதல், சுற்று வேலை அமைத்தல், கொங்கிறீற் இடுதல், புற்தரை அமைத்தல் உள்ளிட்ட வேலைகளை 36.31 மில்லியன் செலவில் நகர அபிவிருத்தி அதிகார சபையும் மேற்கொள்ளவுள்ளது.
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் நிறைவடையவுள்ளது.  2030 வரையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மட்டக்களப்பு மாநகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், 28 இணைத்திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் முதலில் 7 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அதன்படி, மட்டக்களப்பு கோட்டை, விமான நிலையம், வெள்ளைப்பாலம், காந்தி சதுக்கம், வெபர் மைதானம், மட்டக்களப்பு வாயில் உள்ளிட்ட பகுதிகள்; புனரமைக்கப்படவுள்ளன. 
விமானநிலையமானது இரண்டு பில்லியன் செலவிலும், ஆயிரம் வீட்டுத்திட்டங்கள் மற்றும் 25 ஏக்கரில் 250 மில்லியன் செலவில் கைத்தொழில் பேட்டை,  மட்டக்களப்பு நகரிலுள்ள பாலங்கள் அகலமாக்கப்பட்டு 1.2 பில்லியன் செலவில் புனரமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டத்தின் போது மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டத்தில் உள்ள காந்தி சிலை அகற்றப்பட்டு அந்த சிலை பிரிதொரு இடத்தில் நிர்மாணிக்கப்படும் என்று மட்டக்களப்பு நாநகர சபை மேயர் சிவகீத்தா பிரபாகரன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.