2/15/2013

| |

ஜெனீவா மாநாட்டில் இலங்கையை ஆதரித்து இந்தியா வாக்களிக்கும்

மனித உரிமையை பேணுவதில் வளர்முக நாடுகளுக்குள் இலங்கை முன்னிலை:
ஜெனீவாவில் இவ்வாண்டு நடைபெற வுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் அமெரிக்க அரசாங்கத்தின் அனுசரணையுடன் இலங் கைக்கு எதிராக கொண்டு வரப்படும் மனித உரிமை தொடர் பான தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் போது இந்தியா இலங்கையை ஆதரிக்குமென்று நாம் திடமாக நம்புவதாக பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்தார்.
உலகில் உள்ள பெரும்பாலான வளர்முக நாடுகளைவிட இலங்கை மனித உரிமையை பேணிப் பாதுகாப்பதில் முன்னிலையில் இருக்கிறது என்றும் அமைச்சர் சுட்டிக்கட்டினார். இவற்றின் அடிப்படையிலேயே இந்தியா ஜெனீவா மாநாட்டில் கொண்டுவரப்படும் பிரேரணையின் போது இலங்கையை ஆதரித்து வாக்களிக்கும் என்று நாம் திடமாக நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்தியாவில் கேரள மாநிலத்தில் ஊடகவியலாளர்களுடன் உரையாடிய அமைச்சர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்கனவே நடவடிக்கையை எடுத்திருக்கிறார் என்றும் அத்துடன் ஜனாதிபதி தேசிய அபிவிருத்தி திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளித்திருக்கிறார் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாடெங்கிலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களினால் நாட்டின் பொருளாதாரம் வளம்பெற்று வருகிறது என்று தெரிவித்த அமைச்சர் கடந்தாண்டில் இந்தியா அமெரிக்காவின் பிரேரணையை ஆதரித்து வாக்களித்த போதிலும் இன்று நாட்டில் மீள்குடியேற்ற செயற்பாடுகள் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதனால் நிச்சயம் இந்த தடவை இந்தியா எங்களை ஆதரிக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா மட்டுமல்ல சர்வதேச சமூகமும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஆதரிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்தியா எங்களுடைய நெருங்கிய அயல் நாடு மட்டுமன்றி நீண்டகால நட்பு நாடாகும். இந்தியாவை எப்போதும் இலங்கைக்கு உதவி செய்த நண்பனாகவே பார்க்கிறோம் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்தியாவும் இலங்கையும் நீண்டகாலம் பரஸ்பர வர்த்தக தொடர்புகளை கொண்டுள்ளன. இவ்விரு நாடுகளுக் கிடையில் 5 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இலங்கையும் இந்தியாவும் ஒன்றிணைந்து பல்வேறு முதலீடுகளை இரு நாடுகளிலும் செய்திருக்கின்றன. நட்பு நாடுகளான இலங்கையும் இந்தியாவும் என்றென்றும் பரஸ்பர உதவி செய்வதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளன என்றும் அமைச்சர் டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.