உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

3/20/2013

| |

புத்த பிக்கு மீதான தாக்குதலை தயவு தாட்சணியமின்றி தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் ஏனைய தமிழ் தலைவர்களும் கண்டிக்க முன்வரவேண்டும்.

.
மட்டுநகரிலிருந்து எழுகதிரோன் 
Monks in Tamilnaduதஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த புத்த பிக்கு மீது  .சனியன்று (16.03.2013)தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.வடமாநிலங்களைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வு மாணவர்கள் 19 பேர் தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு ஆய்வுக்காக வந்திருந்தனர். அவர்களில் இலங்கையைச் சேர்ந்த சிங்கள இன புத்த பிக்கு மாணவரும் ஒருவர்.மேற்படி குழுவினர் தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பார்வையிட வந்த போது இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த பழனி ராஜேந்திரன்  தலைமையிலான தமிழ்தேச பொதுவுடைமை கட்சியை சேர்ந்தவர்கள்,புத்த பிக்கு மீது தாக்குதல் நடத்தினர். அவர்களைத் தடுத்த மற்றவர்கள், புத்தபிக்குவை பாதுகாப்பாக அழைத்துச் சென்று, தொல்லியல் துறை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டார்.தாக்குதல் நடத்திய தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த 12 பேரைக் கைது செய்யப்பட்டுள்ளனர். 
சில மாதங்களுக்கு முன்பும் இதேபோல் இலங்கையிலிருந்து சுற்றுலாவுக்காக வந்த சிங்கள பயணிகள் விரட்டியடிக்கப்பட்டுதமிழகத்தைவிட்டுவெளியேற்றப்பட்டசம்பவமும்நடைபெற்றது.வேளாங்கண்ணிக்கு வந்த இலங்கைப் பிரமுகர் அடித்து விரட்டப்பட்டார். தப்பித்து திருச்சிக்கு வந்த அவர் மீது முட்டை வீசப்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்சவின் நெருங்கிய உறவினருக்கு இராமேஸ்வரத்தில் அடி உதை விழுந்தது. இந்தச் சம்பவங்கள் மீடியா முன்னிலையில் நடந்தன.

இப்போது ஒரு ஆய்வு மாணவன் ஒரு பெளத்த மத குருவாக இருந்த காரணத்தினால் தாக்கப்பட்டுள்ளார்.கடந்த காலங்களில் இடம்பெற்ற இது போன்ற தனிநபர் பயங்கரவாத செயல்பாடுகள்  மீது  தமிழக காவல் துறையினர் கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தால் நிலைமை இவ்வாறு கட்டு மீறி சென்றிருக்காது.வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இன்று வருவோரை  துரத்தியடிக்கும் தமிழகமாக மாறியிருக்காது.இது மிகவும் கேவலமாதும் கண்டிக்க தக்கதுமானதொரு நிகழ்வு இதுவாகும் அதுமட்டுமன்றி தமது சொந்த அரசியல் இலாபங்களுக்காகவே  இது போன்ற சண்டித்தனங்கள் அரங்கேற்றபடுகின்றன.இத் தாக்குதல்கள் எதேற்சையாக இடம்பெற்ற நிகழ்வுகளாகவன்றி   வீடியோ படம் எடுத்து வெளியிடும் அளவிற்கு முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டிருக்கின்றன என்பது  கவனத்தில் கொள்ளபடவேண்டியவையாகும்.   இலங்கையில் யுத்தம் நடந்து முடிந்து நான்கு வருடங்கள் ஆகின்ற நிலையில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு இப்போது மட்டுமென்ன இவ்வளவு ஆக்ரோசமான போராட்டங்கள் என்று நம்மில் யாருமே யோசிப்பதில்லை.சரி ஜெனிவா பிரேரணை சீசன் என வைத்து கொண்டாலும் இலங்கையிலிருந்து வருகின்ற இந்த அப்பாவிகளை தாக்குவது இலங்கை தமிழருக்கு எவற்றை பெற்று தரும்?  இத்தாக்குதல் நிகழ்வு படமாக்கப்பட்டு சம்பந்தபட்டவர்களின் அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்தபடுகின்ற  அதேவேளை இலங்கையில் அதுவும் சிங்கள மக்களிடத்தில் இவ்வொளி படமானது ஏற்படுத்த கூடிய பாதகமான விளைவுகள் பற்றி தமிழ்நாட்டு தர்ம அடி மன்னர்களுக்கு கிஞ்சித்தும் கவலையில்லை.இந்த கட்டைப்பஞ்சாயத்து காரர்களையும் தர்மஅடி மன்னர்களையும் நமக்கான நீதிமான்களாக கொண்டாடுவதை இனிமேலாவது நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும் தென்னிலங்கையிலும் கணிசமான தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பதை நாம் மறந்து விடலாகாது. இந்திய தமிழர்களால் ஒரு சாது தாக்கப்படுவதை கண்ணுறும் சிங்கள மக்கள் தமது பிரதேசங்களில் வாழும் தமிழர்களை அடித்து துரத்த முனைந்தால் நிலைமை என்னவாகும்? சிங்கள மக்களை அதிகமாக கொண்டுள்ள எந்த ஒரு நகரத்தை எடுத்து கொண்டாலும் அந்த நகர மையங்களில் பெரும் வியாபாரிகளாக இருப்பவர்கள் தமிழ் பேசும் முஸ்லிம்களே அவர்கள் எல்லாம் சிங்கள பகுதிகளில் இருந்து துரத்தப்பட நேர்ந்தால்? அதுமட்டுமல்ல கொழும்பின் முது பெரும் நகை வியாபாரிகள் எல்லோரும் இந்திய செட்டிமாரேயாகும்.இந்திய எதிர்ப்பு வாதத்தின் அடிப்படையில் உருவாகிய ஜேவிபி போன்ற கட்சிகளுக்கு மீண்டும் வலுவூட்டும் வாய்ப்புகளை  இது போன்ற அறிவீலித்தனமான செயற்பாடுகள் வழங்கிவிட்டால் இலங்கை தமிழ் மக்களின் நிலைமை என்னவாகும்? மலையகத்தில் வாழும் இந்திய தமிழர்கள் இன்று வரை இந்திய வம்சாவளிகள் என அடையாளப்படுத்த பட்டு வருகின்ற நிலையில் தமிழ் நாட்டு அரசியல் கோமாளிகளால் உருவாக்கப்படுகின்ற இலங்கை இந்திய முரண்பாடுகள் இலங்கையின் மத்திய மலை நாட்டிலும் எதிரொலித்தால்?  நிலைமைகள் என்னவாகும்?


இது பற்றி நமது தமிழ் தலைமைகளாவது சிந்தித்து பார்க்க வேண்டும்.இது போன்றசமூக பொறுப்பற்ற   தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுடைய  சிங்களவருக்கு எதிரான செயற் பாடுகளைநிறுத்தி கொள்ளுமாறு அவர்களை கேட்டு கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவை கொண்டியங்கும் கூட்டமைப்பினருக்குண்டு. அது மட்டுமன்றி மேற்படி பெளத்த மதகுரு மீதான தாக்குதலை கள்ள மெளனம் காத்து தட்டி கொடுத்தார்களானால் ஓட்டப்பம் வீட்டைசுடும் என்பதாக அது என்றோ ஒருநாள் நமது மக்களை நோக்கி திரும்ப வழி சமைத்தவர்கள் எனும் பழிச்சொல் கூட்டமைப்பினரை வந்தடையும்.சுமார் முப்பது வருடகால கொடியயுத்தத்தின் பிடியிலிருந்து தப்பித்து மீண்டும் வாழத்துடிக்கும் எமதுமக்களை இன்னுமொருமுறை இன்க்கலவரங்களுக்குள்ளும் யுத்தமேகத்தினுள்ளும் தள்ளிவிடமுனைவதை நாம் அனுமதிக்க முடியாது.எனவே தமிழ் நாட்டு மக்களின் இன உணர்வுகளை மதிக்கின்றோம். எமது மக்களுக்காக அவர்கள் எழுப்பும் குரலுக்கு தலைவணங்குகிறோம் என்பதை சொல்லுகின்ற அதேநேரம்  தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் வரவு செலவு கணக்குகளுக்கெல்லாம் வரும்போகும் அப்பாவி வழிப்போக்கர்களை பழிவாங்கும் இழிசெயல்களை தயவு தாட்சணியமின்றி தமிழ்  தேசிய கூட்டமைப்பினரும் ஏனைய  தமிழ் தலைவர்களும் கண்டிக்க முன்வரவேண்டும்.

நன்றி-எழுகதிர்