3/06/2013

| |

ஜெனிவா அமர்விற்கு என வந்து படுத்துறங்கிய கூட்டமைப்பு

ஜெனிவாவுக்குச் சென்ற கூட்டமைப்பினர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் உரை நிகழ்த்தும் போது அதில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டது ஏன் என்று செய்தி இணையத்தளங்கள் சில கேள்வியெழுப்பியுள்ளன.

மேற்படி கூட்டத்தொடரின் முக்கிய அமர்வு கடந்த வெள்ளியன்று நடைபெற்றது. அன்றைய தினமே சனல் - 4 காணொளியும் காண்பிக்கப்பட்டது. நண்பகல் சனல் - 4 இன் மோதல் தவிர்ப்பு வலயம் என்ற ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை பேரவை வளாகத்தில் உள்ள 23 ஆம் இலக்க மண்டபத்தில் காட்டப்பட்டது. அதில் தமிழர்கள் சார்பில் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் சிலரும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். சுமந்திரன் அந்த நிகழ்ச்சி முடிந்ததும் சென்றுவிட்டார். பொதுமண்டபத்தில் நடந்த முக்கிய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

அதன் பின்னர் பிற்பகல் ஐ.நா. பொது மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன், மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை ஆகியோர் உரையாற்றினர். தமிழர்கள் என பார்வையாளர் வரிசையில் அவுஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்திருந்த மாணிக்கவாசகம், பெங்களூர் பல்கலைக்கழக பேராசிரியர் போல் நியுமன், மலேசியாவிலிருந்து வருகை தந்திருந்த ஒரு தமிழ் பெண் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசை சேர்ந்த சுகிந்தன் ஆகியோர் மட்டுமே அமர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

வெள்ளிக்கிழமை பான் கீ மூன் உரையாற்றிய போது ஐ.நா.மனித உரிமை பேரவை பொது மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர் என்றும் பான் கீ மூனிடம் மகஜர் ஒன்று கையளித்ததாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அந்த அமர்வு சுமார் 90நிமிடங்கள் நடைபெற்றது. அது முடிந்ததும் பான் கீ மூன் சென்று விட்டார். பான் கீ மூனை நினைத்த மாத்திரத்தில் ஐ.நா.கூட்டத்தில் வைத்து யாரும் சந்திக்க முடியாது. இது கூட தெரியாது சில தமிழ் அரசியல்வாதிகளும் அவர்கள் நடத்தும் சில இணையத்தளங்களும் நடத்தும் ஏமாற்று வேலைகள் தொடர்ந்தும் நடக்கின்றன.

பான் கீ மூன் பேசிக்கொண்டிருந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் ஐ.நா. மனித உரிமை பேரவை அலுவலகத்திலிருந்து ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள ஹொட்டல் ஒன்றிலேயே இருந்தனர் என்பது தெரியவந்தது. சுமந்திரனை தவிர இவர்களில் எவரும் வெள்ளிக்கிழமை ஐ.நா. மனித உரிமை பேரவையின் வாசல் படிக்கே வரவில்லை. அப்படி இருக்கும் போது ஜெனிவா நகரில் தமிழர்கள் நடத்தும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்து கொண்டு ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறோம் என ஏன் மக்களை ஏமாற்ற வேண்டும் என்று இணையத்தளங்கள் சில கேள்விக்கணை தொடுத்துள்ளன.

ஜெனிவாவில் இப்போது மைனஸ் 4 பாகையாக வெப்பநிலை குறைந்தமையால் கடும் குளிர் நிலவுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி - இலங்கை நெட்