உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

8/17/2013

| |

"மலையகம் எழுகிறது"

மலையகத்தில் கல்வியாளராகவும் சிந்தனையாளராகவும் அரசியல், சமூக செயற்பாட்டாளராகவும் திகழ்ந்த அமரர் வி.டி.தர்மலிங்கம் சிறைவாழ்க்கை அனுபவித்த காலத்தில் சரிநிகர் பத்திரிகைக்கு தொடர்ச்சியாக எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு ´மலையகம் எழுகிறது´ எனும் நூல் வடிவில் வெளிவந்துள்ளது. 

இந்த நூலின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் ஞாயிறு (18.08.2013) காலை 10 மணிக்கு தலவாக்கலை கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

மிக நீண்டகாலமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த நூல் லன்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ´எழுநா ஊடக நிறுவனத்தின்´ பதிப்பாக வெளிவந்துள்ளது. 

இலங்கைக்கு அதனை தருவித்து அறிமுகப்படுத்தும் பணியினை பாக்யா பதிப்பகம் மேற்கொண்டுள்ளது. நூலுக்கான முன்னுரையை மலையகத்தின் தளபதியாக திகழ்ந்த இரா.சிவலிங்கமும் அணிந்துரையை வி.டி.தர்மலிங்கமும் சிறையிலிருந்த அரசியல் சகாவான பி.ஏ.காதரும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அறிமுக நிகழ்வுக்கு மூத்த எழுத்தாளர் மு.சிவலிங்கம் தலைமை வகிக்கவுள்ளார். நூலின் அறிமுகவுரையை பாக்யா பதிப்பக நிறுவுனர் மல்லியப்புசந்தி திலகர் வழங்கவுள்ளார். நூலாய்வுரையை கலாநிதி ந.இரவீந்திரன் ஆற்றவுள்ளார். 

ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரி உப பீடாதிபதியும் வி.டி.தர்மலிங்கத்தின் இளைய சகோதரருமான வ.செல்வராஜாவின் உரையும் எழுநா ஊடக நிறுவனம் சார்பில் சயந்தனின் உரையும் இடம்பெறவிருக்கின்றது. 

அமரர் வி.டி.தர்மலிங்கத்தின் குடும்ப உறவுகளும் அன்னாரது அரசியல் தோழர்களும் கலந்து கொண்டு வி.டி தர்மலிங்கத்தின் நினைவலைகளை பகிர்ந்து கொள்ளும் இந்த நிகழ்வுக்கான ஒழுங்கமைப்புகளை தலவாக்கலை தமிழ்ச்சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.