உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/20/2013

| |

3 மாகாணசபைகளுக்கும் நாளை தேர்தல்: 10 மாவட்டங்களிலிருந்து 142 பேர் தெரிவு

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் நாளை நடைபெறுகின்றது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. மூன்று மாகாண சபைகளிலுமிருந்து 142 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கென 43 இலட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மூன்று மாகாண சபைகளிலும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 3785 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் நடைபெறும் 10 மாவட்டங்களிலும் 3612 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. வாக்களிப்பு நிலையங்களில் சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் வாக்களிப்பு ஏற்றுக்கொள்ளப்படும். ஆகையினால் வாக்காளர்கள் நேரகாலத்துடனேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச்  சென்று தமது வாக்குகளை வழங்குவதன் மூலம் ஜனநாயக உரிமையை முறையாக பயன்படுத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அறிமுகமாகும் பிளாஸ்ரிக் வாக்குப் பெட்டியை அதிகாரி பார்வையிடுகிறார்
தேர்தலை முன்னிட்டு மூன்று மாகாண சபைகளுக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.மொஹமட் தெரிவித்தார். தேர்தல் கடமைகளுக்கு 40 ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்களை தேர்தல் திணைக்களம் நியமித்துள்ளது.
கடமை அதிகாரிகள்
அரசாங்க அதிகாரிகள் தமது வாக்களிப்பு நிலையங்களில் இன்று முதல் தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளனர். இதற்காக வெளிமாவட்டங்களிலிருந்துவரும் அரசாங்க உத்தியோகத்தர்கள் நேற்று வியாழக்கிழமையன்றே குறித்த மாவட்டத்துக்கு கடமை நிமித்தம் அறிக்கையிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
வாக்குப் பெட்டிகள்
வாக்குப் பெட்டிகள் யாவும் இன்று அந்தந்த மாவட்டத்துக்குரிய தேர்தல் அலுவலகங்களிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும். இம்முறை அநேகமான வாக்களிப்பு நிலையங்களில் பிளாஸ்டிக்கிலான வாக்குப் பெட்டிகளை தேர்தல்கள் திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது.
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் முழுமையாக பிளாஸ்டிக்கிலான வாக்குப் பெட்டிகளே பயன்படுத்தப்படவுள்ள நிலையில் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்துக்கு மாத்திரம் 46 பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.
பாதுகாப்பு மற்றும் முறைப்பாடுகள்
வாக்களிப்பு நிலையங்கள் தோறும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளும், வெளியிலும் பொலிஸார் நேற்று முதல் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெற்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் பொலிஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் சட்டவிதிகளை மீறிய செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் உடனடியாக மாவட்ட தேர்தல் அலுவலகம் அல்லது தெரிவத்தாட்சி அலுவலகம் அல்லது பிரதேச செயலகத்தின் இணைப்பு அலுவலகம் அல்லது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வாக்களிப்பு
வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்துக்குள் ஏற்படக்கூடிய வீணான தாமதம் மற்றும் சிரமங்களைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் அடையாள அட்டை அல்லது தேர்தல்கள் திணைக்களத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களை தம்முடன் எடுத்துச் செல்லல் வேண்டும்.
வாக்காளர்கள் தமது வாக்குகள் நிராகரிக்கப்படாத வகையில் தாம் விரும்பிய கட்சிக்கோ அல்லது சுயேச்சைக் குழுவுக்கோ புள்ளடியிட்டதன் பின்னர் விரும்பு வாக்குகளை ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ அல்லது மூவருக்கோ தெரிவிக்க முடியுமெனவு ர்கள்
அங்கவீனர்கள் தம்மால் நேரில் சென்று வாக்களிக்க முடியாத பட்சத்தில் கிராம அலுவலகர் மற்றும் வைத்தியரினால் வழங்கப்பட்ட அறிக்கைகளுடன் உதவியாளர் ஒருவருடனும் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களிக்க முடியும்.
கண்பார்வையற்றவர்கள் கூறுவதனைக் கேட்டு உடன்வந்துள்ள உதவியாளர் அவர் சார்பில் வாக்களிக்க முடியும். இல்லையேல் குறித்த நபர் கூறுவதனை அங்கு கடமையில் உள்ள உத்தியோகத்தர் இன்னுமொரு உத்தியோகத்தர் முன்னிலையில் அவர் சார்பில் இரகசியமாக வாக்களிக்க முடியும்.
வாக்களிப்பு முடிவடைந்ததும் வாக்குப் பெட்டிகள் மிகவும் பாதுகாப்பான முறையில் வாக்கெண்ணும் நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படும். 377 வாக்களிப்பு நிலையத்தில் இந்த வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
முதலாவது தேர்தல் பெறுபேறாக தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
மூன்று மாகாண சபைகளுக்குமான தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 9,10,12,13,14 மற்றும் 18 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.