9/28/2013

| |

இலங்கை-ஈரான் தலைவர்கள் அமெரிக்காவில் சந்தித்து பேச்சு

வளர்முக நாடுகளுக்கு இணைந்து குரல் கொடுக்கவும் தயார்
இலங்கை மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையில் பலமான நல்லுறவைக் கட்டியெழுப்புதல் மற்றும் வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்தல் தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சர்வதேச அரங்குகளில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து இப்பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது. நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் இணைந்து குரலெழுப்புவது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் எதிர்கால பயணத்திற்கு உதவும் எனவும் இதன்போது ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரொஹானி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரொஹானிக்குமிடையிலான இரு தரப்புப் பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது. இப்பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.
ஈரான் அரசாங்கமானது இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் எரிசக்தித் துறைக்கும் வழங்கி வருகின்ற ஒத்துழைப்புக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஈரானிய ஜனாதிபதிக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். ‘நீங்கள் எமக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பை நாம் மதிக்கின்றோம்’ என இதன்போது ஜனாதிபதியவர்கள் குறிப்பிட்டார்.
கடந்த மூன்று தசாப்த கால பயங்கரவாத பாதிப்புகள் பற்றியும் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரான அபி விருத்தி, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியமர்த்தல் மற்றும் முரண்பாடு நிலவிய பிரதேசங்களில் தேர்தல் நடத்தியமை உட்பட நாட்டை இயல்பு நிலைக்கு மீளக் கொண்டுவந்துள்ள நிலைமைகளை ஜனாதி பதியவர்கள் ஈரானிய ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினார். ‘நல்லுறவுகளைப் பேணு வதில் நாம் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகிறோம்’ எனவும் ஜனாதிபதி இதன் போது உறுதிபடத் தெரிவித்தார்.
சர்வதேச அரங்குகளில் இஸ்லாமிய நாடுகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் நன்றி தெரிவித்ததுடன் சர்வதேச அரங்குகளில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பிலும் இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர். தொடர்ச்சியான நட்புறவைப் பேணுவதற்கு ஒருவருக்கொருவர் தொடர்ந்தும் உதவுதல் சிறந்ததாகுமென சுட்டிக்காட்டிய ஈரானிய ஜனாதிபதி, தமது பிராந்தியங்களில் பிரிவினை வாதம் மற்றும் மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதில் நாடுகள் முனைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, டளஸ் அழகப்பெரும, ஐ. நா. வின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன்ன உட்பட உயரதிகாரிகள் பலரும் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளனர். ஈரானிய ஜனாதிபதியுடன் ஐ. நா. விற்கான அந்நாட்டின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மொஹமட் கசாயீ உட்பட உயர் மட்ட அதிகாரிகள் பலரும் இச் சந்திப்பில் பங்கேற்றனர்