10/01/2013

| |

நிமோ என்றழைக்கப்பட்ட சமூகவிடுதலை போராளி செந்திலின் வாழ்வு.

1983இல் இடம்பெற்ற இனக்கலவரம் தமிழீழ விடுதலைக்காக பல்லாயிரம் இளைஞர்களை ஏதோவொரு இயக்கத்தில் சேர்ந்துவிடவேண்டுமென தூண்டியது. அவ்வேளைகளில் தமிழீழ விடுதலை இயக்கமான டெலோவில் நிமோ இணைந்துகொண்டு தமிழீழ விடுதலைக்காக தன்னை அர்ப்பணிக்க முன்வந்தான். டெலோவின் அரசியல் பாசறையில் கற்று தேர்ந்த அவன் மன்னார் மாவட்டத்தின் செந்தில் எனும் பெயருடன் அரசியல் வேலைகளில் ஈடுபடலானான். ஓய்வு உறக்கமின்றி செயற்பட்டு டெலோ இயக்கத்துக்கென பலமான அத்திவாரமொன்றை மன்னார் பிரதேசத்தில் நிலைநாட்டியதில் செந்திலின் பங்கு அளப்பெரியது. ஆனாலும் விடுதலை இயக்கங்களுக்குள் உருகொண்ட வன்முறை கலாச்சாரம் பல்லாயிரம் போராளிகளை போலவே செந்திலின் அழகிய தமிழீழ கனவையும் கலைத்துப்போட்டது. டெலோவின் உள்ளக முரண்பாடுகள் முற்றி வன்முறைகள் தலைதூக்கியபோது செந்தில் உட்கட்சி ஜனநாயகத்துக்காக உரத்து குரல்கொடுத்தான். 1980 களில் தமிழீழ விடுதலை புலிகள் ஏனைய இயக்கங்களை தடைசெய்தனர். போராடுவதற்கான உரிமையை தமக்கு மட்டுமே உரித்துடையதாக்கி கொண்டு மாற்று இயக்கபோராளிகளை தேடி தேடி அழித்தபோது செந்தில் சொந்த மண்ணிலேயே அகதியாக தலைமறைவு வாழ்க்கை வாழ நிர்பந்திக்கப்பட்டான். புலிகளினால் பல டெலோ போராளிகளும் தலைவர் சிறி சபாரெட்ணமும் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது செந்திலின் மனதில் அழியாத வடுக்களை ஏற்படுத்தியது. எமது மக்களின் விடுதலைக்கனவு புலிகளால் சீர்குலைக்கப்படத்தொடங்கியபோது வேதனையும், விரக்தியும், நம்பிக்கையீனமும் கொண்டலைந்த செந்தில் நாட்டைவிட்டு வெளியேறி ஜெர்மனியில் அரசியல் தஞ்சம் பெற்றான். வெளிநாட்டு வாழ்க்கையின் சுகபோகங்களில் செந்தில் தன்னை இழந்துவிடவில்லை. தன்னால் முடிந்தவரை தமிழ் சூழலில் ஜனநாயக மீட்சிக்காகதொடர்ச்சியாக குரல்கொடுத்தான். விடுதலை எனும் பெயரில் புலிகள் தமிழ் மக்கள்மீது கட்டவிழ்த்து விட்டிருந்த அடக்குமுறைகளை எதிர்ப்பதில் ஓயாது உழைத்தான். தமிழ் மக்களின் விடிவிற்கு புலிகளின் அழிவே முதல் நிபந்தனை என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிந்த அவன், புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைமீறல்களை அம்பலப்படுத்தவதில் முன்னின்று செயல்பட்டான். குழந்தைப் போராளிகளின் வாழ்வுரிமைக்காக ஓங்கி குரல்கொடுத்தவன் செந்தில். மாற்று அரசியல் குரல்களுக்காக லண்டனில் இருந்து இயங்கிய ரி.பி.சி. வானொலி முக்கியத்துவம் பெற்றிருந்த காலங்களில் அவ்வானொலியின் தொடர்ச்சியான இயக்கத்திற்கு செந்திலின் உழைப்பு பெரிதும் உதவியது. புலிகளால் அவ்வானொலியை நிறுத்திவிட பலவித எத்தனங்களும் ஏவப்பட்ட வேளைகளில் செந்தில் போன்றவர்கள் உயிரை துச்சமென மதித்து அவ்வானொலியின் ஊடாக மாற்று அரசியல் களத்திற்கு பலம் சேர்த்தனர். வேண்டாத விவாதங்களிலும் கோட்பாட்டு சர்ச்சைகளிலும் இருந்து விலகி நின்ற செந்தில் செயல்பாடுகள் மீதே அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். இதன்காரணமாகவே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட ஜனநாயகச சூழலைப் பயன்படுத்தி மீண்டும் தனது பிரதேச மக்களுக்கு தன்னாலான சமூகப் பணிகளை முன்னெடுப்பதில் அக்கறைகொண்டான் செந்தில். தனது வாழ்வும், குடும்பமும் லண்டனில் நிலைபெற்றிருந்த போதிலும் அதனை விடுத்து தமிழினத்தின் மேம்பாட்டுக்காக மீண்டும் தன்னை அர்ப்பணிப்பதில் அவன்கொண்டிருந்த உறுதியான நிலைப்பாடு கடந்த சில வருடங்களாக இலங்கையிலேயே அவன் காலங்களை கழிக்கச்செய்தது. தனது சொந்த ஊரான முள்ளியவளைப் பிரதேசத்தில் எதிர்பாராத விபத்தொன்றின் மூலம் செந்திலின் உயிர் எம்மை விட்டுப்பிரிந்திருக்கின்றது. விடுதலைப்போராளியாகவே மரணகாலம்வரையான அவனது வாழ்வு எம்முன் விரிகின்றது. செந்திலின் மரணச் சடங்கில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மக்களும், ஆங்காங்கே அஞ்சலி செலுத்திய மக்கள் கூட்டமும் அவனொரு சமூக விடுதலைப்போராளியாக வாழ்ந்தான் என்பதன் மகத்துவத்தை உணர்த்தி நிற்கின்றனர். எம்.ஆர்.ஸ்ராலின்