10/18/2013

| |

வெருகலில் பட்டதாரிகள் சங்கம் உதயம்

வெருகல் பிரதேசத்திலுள்ள பணிபுரியும் பட்டதாரிகள் அனைவரும் ஒன்றுகூடி புதன்கிழமை (16) பணிபுரியும் பட்டதாரிகள் சங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் இதுவரையில் பட்டம்பெற்ற பட்டதாரிகள் சுமார் இருபது பேருக்கு மேல் இருப்பதாக நேற்று உருவாக்கப்பட்ட பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் சோமசுந்தரம் சிவகலா தெரிவித்தார்.
புதிய பட்டதாரிகள் சங்கத்தின் நிர்வாகத்திற்கு உறுப்பினர்கள் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.
இதன் தலைவராக எஸ்.கணேஸ் (இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரி ஆசிரியர்), உப தலைவர் வி.அருள்நேசராஜ் (ஈச்சிலம்பற்று ஸ்ரீ ஷெண்பகா வித்தியாலய அதிபர்) பொருளாளர் சி.ரூபகாந்தன் (சமூர்த்தி முகாமையாளர் வெருகல் பிரதேச செயலகம்) போஷகர, பி.தனேஸ்வரன் (பிரதேச செயலாளர், வெருகல்) மற்றும் இவர்களுடன் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக பி.கிருஷாந்தி, சி.சத்தியகலா, சி.மங்கையற்கரசி உள்ளிட்ட ஏழு பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
பட்டதாரிகள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய சங்கத்தின் போஷகரும் வெருகல் பிரதேச செயலாளருமான பி.தனேஸ்வரன், 'போரினால் பாதிக்கப்பட்டுள்ள இந்தப் பிரதேசத்தில் ஒரு பட்டதாரிகள் சங்கம் முதன் முறையாக உருவாகியிருப்பது இந்தப் பிரதேசத்தின் கல்வி உட்பட பல்வேறு அபிவிருத்திகளையும் திறம்பட முன்னெடுத்துச் செல்வதற்கு உதவும். அதேவேளை கல்விக்கூடான மறுமலர்ச்சியே நிரந்தர அபிவிருத்திக்குத் துணை புரியும்' என்றார்.