11/27/2013

| |

கே.எஸ். சிவகுமாரன் பார்வையில் இலக்கியச் சுவை கொட்டும் அனாரின் கவிதைகள்...

Photo : Anar (Issath Rehana Azeem), Tamil poet from Sri Lanka: http://thne.ws/1aPNYhH #LFL2014 #chennaiசாந்தமருதுவைச் சேர்ந்த இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அkமை உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் வித்தியாசமாக இலக்கியம் சமைப்பவர்களும், இரசிப்பவர்களும் அனார் என்ற பெண்ணையும் அவரின் கவிதையாற்றல்களையும் அறிந்திருப்பர். இரு பெயர்களும் ஒருவரையே குறிக்கும்.
பல விருதுகளைப் பெற்றுள்ள இவருடைய கவிதை நூல்கள் ஓவியம் வரையாத தூரிகை, எனக்குக் கவிதை முகம், உடல் பச்சை வானம் என்பனவாகும் தமிழ்நாடு நாகர்கோவிலில் இருந்து வெளியாகும் காலச்சுவடு என்ற இலக்கிய ஏட்டினர் மூன்றாவது நூலை வெளியிட்டுள்ளனர்.
இந்நூலில் இடம்பெற்ற கவிதைகளில்,
“இயற்கை பெண்ணுடலாகிறது.
இயற்கை பெண்ணாகிறது” என்று சுகுமாரன்
எழுதிய கூற்று பின்னட்டையில், கவிஞரின் நிழற் படத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள பொதுவாசகர்கள் அனாரை அதிகம் அறிந்திருக்காவிட்டால்
அதற்குக் காரணம், அவருடைய கவிதைகள் அதிகமாக பிறநாடுகளின் தமிழ் ஏடுகளில் வெளிவந்தமையாய் இருக்கக்கூடும். கடந்த மூன்றாடுகளில் அனார் எழுதிய 34 கவிதைகள் இந்நூலிலே சேர்க்கப்பட்டுள்ளன.
‘புதுக்கவிதை’ என்ற பெயரிலே கேள்வி சார்ந்த வசனங்களையும், அரசியல் சார்ந்த சுலோகங்களையும் நெஞ்சிலோ, உணர்விலோ எந்தவிதமான பற்றுமில்லாமல் பறைசாற்றித் தம்மைக் கவிஞர்களாக கருத்திக் கொள்வோரின் படைப்புகளின்று வெகுதூரம் உயர்ந்த மட்டத்தில் கவிதா நெஞ்சத்துடன் அழகான தமிழ்ச் சொற்களைக் கையாண்டு கவிதையாகவே சொற் சித்திரங்களைத் தந்திருக்கும் அனார் எனது கணிப்பில் பாராட்டுக்குரியவர்.
எனது கணிப்புகள் பெரும்பாலும் அகவயமானது என்பதனை எனது முதலாவது கட்டுரையில் வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தியிருந்தேன்.
அனாரின் படைப்புலகம் அவருக்கே உரித்தானது. அது என்ன என்று அறிந்துகொள்ள நாம்தான் அகவயமாக அவர் மனதில் நுழைந்து புரிந்து கொள்ள வேண்டும்.
நாமும் கவியுள்ளங் கொண்டே இத்தகைய கவிதைகளை அணுக வேண்டும். வெளியேயிருந்து நாம் வரித்துக் கொண்ட கொள்கைகள், கோட்பாடுகள் போன்றவற்றை வெளியொதுக்கிவிட்டு, இறைவனைப் புரிந்து கொள்ள நாம் நம்மையே மறக்கவேண்டும் என்பதுபோல, பெரும்பாலான அகவயப் படைப்பாளர்களைப் புரிந்து கொள்ள நாம்தான் சிரத்தையுடன் அத்தகையோர் படைப்புகளை அணுகவேண்டும்.
அது சரி ஐயா, “விமர்சனம்” என்னாவது? நீங்கள் குறிப்பிடும் “திறனாய்வு” என்னாவது என்கிaர்களா? ஒரு படைப்பாளியின் பங்களிப்பை பரந்த இலக்கியப்படுதாவில் இனங்கண்டு கண்டித்து, பாராட்டுவது “ஆழமான”, “விமர்சகர்”களின் பணியாக இருக்கலாம்.
ஆயினும் என் போன்ற இரசிகனுக்கு படைப்பாளியின் கண்ணோட்டத்தைப் புரிந்து அனுபவ வெளிப்பாட்டைத் தெரிவிப்பது மேலென நினைக்கிறேன்.
தவிரவும் இந்த இலக்கிய மதிப்பீடுகள் சாசுவதமான துமல்ல. ஒரு காலத்தில் புறக் கணிக்கப்பட்ட படைப் பாளிகள் மற்றொரு காலத்தில் மறுமதிப்பீடு செய்யப்படுவது ஒன்றும் புதிதானதல்ல. அதனாற் போலும் ‘மெளனி’ என்ற எழுத்தாளர் சமூகப் பிரச்சி னைகளைக் கையாளாதனால் ஏளனம் செய்யப் பட்ட போதிலும், அந்தச் சிறுகதை ஆசிரி யரின் பெயர் இன்றும் பேசப்பட்டு வருகிறது.
அனாரின் கற்பனைக் கனவுகளை இனங்கண்டு சஞ்சரிக்கும் பொழுது ஓர் இலக்கியச் சுவையை நாம் உணரமுடியும். அவருடைய படைப்புலகம் சாதாரண வாசகர்களாகிய நமக்கு அன்னியமாகப் படலாம். அதை நாம் நிராகரிக்கவும் கூடும். இருந்தபோதிலும் அனார் நம்மை அந்த உலகுக்கு அழைத்துச் செல்லும் பாங்கு நிச்சயமாக நல்ல கவிதைகளில் காணப்படும் அழகுதான்.
இதை எப்படி விளக்குவது?
ஆழமான விமர்சனம் என்ற பெயரில், ஒரு மலரைச் சின்னாபின்னமாக்குவது போல, பகுப்பாய்வு என்ற பெயரில் கிழித்துக் கண்டனம் செய்கையில் படைப்பு வெறும் வெறுமையாகத்தான் இருக்கும். கவிதைக்கு முக்கியமான உறுதிப் பொருள்கள் இருப்பது அவசியம். அவற்றுள் ஒன்று புத்தாக்கம் கொண்ட சொல்லாட்சி. சொற்கள் வகிக்குமிடத்தைப் புறக்கணிக்க முடியாதல்லவா? கவிதைக்கழகு லயமுங்கூட. அவற்றை நீங்கள் இக்கவிதைகளில் காணலாம்.
உதாரணமாக எடுத்துக் காட்டுவதென்றால், கவிதை வந்தமர்ந்த சொற் பிரயோகங்களைக் காட்ட முடியும். அவற்றுள் பல என் இதயத்தை மென்மைப்படுத்தின. அவற்றுள் வித்தியாசமானவையும் இருந்தன.
அனார் ஆங்கிலக் கவிதைகளைப் படிக்கிறாரோ தெரியாது. அத்தகை நல்ல கவிதைகள் போன்று அணிச் சேர்ககை என்னைப் பரவசமூட்டின. இங்கே பாருங்கள்:
“மந்தமாகப் பெய்யும் மழைக்குள்
வெயில் கீற்று
வயலின் ஒலியாக ஊடுருவும்போது
மறுபடியும் நாம்
காதலைச் சொல்லிக் கொள்கிறோம்”
இந்த அழகிய அர்த்தம் மிகுந்த வரிகளை விளக்கித்தான் கூற வேண்டுமா? இரசியுங்கள்:
“உவகை பொங்கும் உறவின் கண்களில்
உண்மை கொடுங்கனவாகித் தெரிகின்றது”
“அபூர்வமான மெழுகுக் கடல்
ஓர் காலைப் பொழுதெனத் தெரிகின்றது”.
இவர் எழுதிய “மருதம்” என்ற கதையோட்டம் போன்ற விவரணைக் கவிதை எனக்கு மிகவும் பிடித்தது. நீங்களும் சுவையுங்கள்.


*நன்றி தினகரன்