11/02/2013

| |

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பிரதேச பிரிவில் அத்துமீறி குடியேறியவர்களை காணிகளை விட்டு ஒருமாத காலத்துக்குள் வெளியேற உத்தரவு


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் மேச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட காணியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 23பேர் அத்துமீறி 160 ஏக்கர் காணிகளைப் பிடித்துள்ள நிலையில் அக்காணிகளைப் பிடித்தவர்கள் காணிகளை விட்டு ஒருமாத காலத்துக்குள் வெளியேற வேண்டும் என்று மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார்.
உன்னிச்சை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட வெட்டிப்போட்டசேனைப் பகுதியிலே 160 ஏக்கர் காணிகளில் 23பேர் அத்துமீறி சேனைப் பயிர்களில் ஈடுபட்டுவதுடன் சேனைப் பயிர்களை மேற்கொள்வதற்காக காடுகளை அழித்தும் வருகின்றனர். குறித்த பகுதிக்கு அண்மையில் மண்முனை மேற்குப் பிரதேச செயலக அதிகாரிகள் சென்று பார்வையிட்டதுடன் குறித்த காணிகளைப் பார்வையிட்டு உறுதிப்படுத்தினர்.
அத்துடன் இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ள காணித் துண்டுகளிலும் கிராம சேவை அதிகாரி, காணி தொடர்பான அதிகாரிகளினால் மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் வெ.தவராஜாவினால் கையொப்பமிட்ட 30 நாட்களில் வெளியேறுமாறு கோரும் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க அரச காணிகள் (ஆட்சி மீளப்பெறுதல்) சட்டம் 1981ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க 1983ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க அரச காணிகள் (ஆட்சி மீளப்பெறுதல்) சட்டம் திருத்தியவாறு வெளியேற அறிவிக்கும் படிவத்தினுடாக 2013.11.25ஆம் திகதிக்கு முன்னர் குறித்த காணியில் இருந்து வெளியேறி கிராம சேவை அலுவலரிடம் வெளியேறியமையினை உறுதிப்படுத்துமாறும் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த நவம்பர் மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் வெளியேறாவிட்டால் நீதிமன்றத்தின் ஊடாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே 9பேர் இப்பகுதியில் அத்துமீறி சேனைப் பயிர்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இவ்வாறு அறிவித்தல் விடுக்கப்பட்ட நிலையில் வெளியேறாத நிலையில் நீதிமன்றினடாக நடவடிக்கை எடுத்த போது குறித்த 9 பேரும் காணியில் இருந்து வெளியேறிய நிலையிலேயே மீண்டும் புதிதாக 23பேர் அத்துமீறி காணிகளைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.