12/14/2013

| |

எல்.எல்.ஆர்.சியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பிலான கருத்தரங்கு

கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளினைச் செயற்படுத்தும் வகையில் 'தொழிற்சங்கமும் ஜனநாயகமும்: சிவில் நிர்வாகத்தில் அவற்றின் நிலைப்பாடும் பங்களிப்பும்' என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் திங்கட்கிழமை காலை 9 மணிமுதல் 4 மணிவரை நடைபெறவுள்ள இக் கருத்தரங்கில் வளவாளர்களாக இலங்கை திறந்த பல்கலைக்கழக பேராசிரியர். கமினா குணரட்ண, சுதந்திர தொழிற்சங்க அபிவிருத்தி நிலையத்தின் ஜீவி.டி.திலகசிறி, கொழும்புப் பல்கலைக்கழக சட்டப்பீடத்தின் விரிவுரையாளர் ஏ.சர்வேஸ்வரன், வீரகேசரி வாரவெளியீடுகளின் முன்னாள் ஆசிரியர் வி.தேவராஜ், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ்.ஜெய்சங்கர்  ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் வினோபா இந்திரன், தேசிய சமாதான பேரவையின் தலைவர் ரொனி செனிவரெட்ன ஆகியோரும்; கலந்துகொள்ள உள்ளனர்.
இலங்கை திறந்த பல்கலைக்கழக பேராசிரியர். கமினா குணரட்ண  'நல்லாட்சியும் தொழிற்சங்கங்களும்' எனும் தலைப்பிலும், சுதந்திர தொழில்சங்க அபிவிருத்தி நிலையத்தின் ஜீவி.டி. திலகசிறி 'தொழிற்சங்கங்களும், தேசத்தைக் கட்டியெழுப்புதலும்' என்ற தலைப்பிலும்,  'கொழும்புப் பல்கலைக்கழக சட்டப்பீடத்தின் விரிவுரையாளர் ஏ.சர்வேஸ்வரன் 'சட்டமும் தொழிற்சங்கங்களும்' என்ற தலைப்பிலும், வீரகேசரியின் முன்னாள் ஆசிரியர் வி.தேவராஜ் 'தொழிற்சங்கங்களும் ஜனநாயகமும்' என்ற தலைப்பிலும், கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை தலைவர் எஸ்.ஜெய்சங்கர் 'தொழிற்சங்கங்கள்: சிவில் நிர்வாகத்தில் அவற்றின் நிலைப்பாடும், பங்களிப்பும்' என்ற தலைப்பிலும் உரையாற்றவுள்ளனர்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளிப்பினை முனைப்பாகக் கொண்டு நடைபெறும் இவ் முழுநாள் கருத்தரங்கிற்கான அனுசரணையை தேசிய சமாதானப் பேரவை வழங்குகிறது.