12/07/2013

| |

போராட்டத்துக்கு மட்டுமல்ல இணக்கப்பாட்டுக்கும் முன்னுதாரணம் தந்தவர்

தென் ஆபிரிக்காவில் நிறவெறி ஆட்சியை ஒழித்து கறுப்பின மக்களுக்கு அதிகாரம் பெற்றுத் தந்த நெல்சன் ரொலிஹ்லஹ்லா மண்டேலா தனது 95 வயதில் காலமானார்.
தென்னாபிரிக்காவில் குலு கிராமத்தில் 1918 ஆம் ஆண்டு ஜுலை 18 ஆம் திகதி பிறந்த மண்டேலா, தனது 95 வது வயதில் ஜோகன்ஸ்பர்க் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதை தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா தொலைக்காட்சி மூலம் உலக நாடுகளுக்கு நேற்று அறிவித்தார்.
நுரையீரல் தொற்று நோய் காரணமாக கடந்த ஜூன் மாதம் பிரிட்டோரியா மருத்துவமனையில் மண்டேலா அனுமதிக்கப்பட்டார். மண்டேலாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாததால் செப்டம்பர் மாதம் வீடு திரும்பிய அவருக்கு அவரது வீட்டிலேயே வைத்து தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நெல்சன் மண்டேலாவின் குடும்ப உறுப்பினர்கள் சூழ்ந்திருக்கையில் அவரது உயிர் 2013 டிசம்பர் 5 ஆம் திகதி இரவு 8.50 மணிக்கு பிரிந்துள்ளது.
தான் மரணித்த பின்னர் தனது சொந்த கிராமத்தில் தன்னை அடக்கம் செய்ய மண்டேலா விருப்பம் தெரிவித்திருந்ததால், அவரது விருப்பம் நிறைவேற்றப்படும் என்று தென்னாபிரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை இறுதிக் கிரியைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தென்னாபிரிக்க நாடு பெருமை வாய்ந்த குடிமகனை இழந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்துள்ள அந்நாட்டு
ஜனாதிபதி முழு அரசு மரியாதையுடன் மண்டேலாவின் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற சுதந்திர போராட்ட வீரர் நெல்சன் மண்டேலாவின் மறைவு காரணமாக தென்னாபிரிக்கா சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ‘நாடு ஒரு நல்ல புதல்வனை இழந்துவிட்டது. மக்கள் சிறந்த தந்தையை இழந்துவிட்டனர்’ என தென்னாபிரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நெல்சன் மண்டேலாவின் மறைவு குறித்து தென்னாபிரிக்க ஜனாதிபதிகளும் மக்களுக்கும் தனது அனுதாபச் செய்தியை அனுப்பி வைத்துள்ளார்.
பொதுநலவாய அமைப்பின் தலைவர் என்ற வகையிலும், இலங்கையின் ஜனாதிபதி என்ற வகையிலும் அவர் தனது அனுதாபச் செய்தியை அனுப்பி வைத்துள்ளார். அமெரிகக் ஜனாதிபதி பராக் ஒபாமா அமரிக்காவில் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும், மண்டேலாவின் மறைவுக்காக துக்கதினம் அனுஷ்டிக்குமாறு தெரிவித்துள்ளார். ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், பிரிட்டிஷ் மகாராணியார், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன், பில் கிளிண்டன் உட்பட உலகத் தலைவர்கள் அத்தனை பேரும் தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.
இறுதி ஊர்வலத்தில் உலகத் தலைவர்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது. தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சியில் இணைந்து தீவிரமாக போராடிய மண்டேலாவை 1964ல் நிறவெறி வெள்ளையர் அரசு சிறையில் அடைத்தது. 27 ஆண்டுகளுக்குப் பின் 1990ல் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையோடு கறுப்பின மக்களுக்கும் நிறவெறி வெள்ளையர் ஆட்சியிலிருந்து விடுதலை கிடைத்தது.
தென் ஆபிரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த முதல் ஜனாதிபதியாக மண்டேலா தேர்ந்தெடுக்கப்பட்டார். மண்டேலா சிறையிலிருந்த போதே அவருக்கு நேரு சமாதான விருதையும் 1990ல் பாரத ரத்னா விருதையும் வழங்கி இந்தியா கெளரவித்தது. 1993 ல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. 2 மனைவிகளைக் கொண்ட மண்டேலாவிற்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.

மனிதநேயம் படைத்த தேசத் தலைவரை உலகம் இழந்துவிட்டது

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவு குறித்து பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பதவி வகிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் ஜுமாவுக்கு அனுப்பி வைத்துள்ள அனுதாபச் செய்தியில்; பொதுநலவாய அமைப்பு நாடு களின் தலைமைப் பதவி வகிக்கும் தான், தென்னாபிரிக்க ஜனாதிபதி அவர்களுக்கும் தென்னாபிரிக்க மக்களுக்கும் குறிப்பாக மறைந்த மாபெரும் தலைவரும் நவீன தென்னாபிரிக்காவின் ஸ்தாபகருமான மாண்புமிகு நெல்சன் மண்டெலாவின் குடும்பத்துக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாபெரும் தலைவர் நெல்சன் மண்டெலா உலகின் தன்னிகரற்ற தலைவர் என்ற அழியாப்புகழைப்பெற்றுள்ளார் என்றும் ஜனாதிபதி தனது செய்தியில் சுட்டிக் காட்டினார்.
அமரர் நெல்சன் மண்டெலாவின் தலைமையின் கீழ் 1994ம்ஆண்டில் தென்னாபிரிக்கா மீண்டும் பொதுநலவாய அமைப்பில் இணைந்து கொண்ட பின்னர் பொதுநலவாயத்தின் மதிப்பு உன்னத நிலை அடைவதற்கு உதவியாக அமைந்தது.
மனித குலத்தின் மதிப்பை அதிஉன்னத மட்டத்திற்கு உயர்த்தும் செயற்பாட்டுக்கு உந்து சக்தியாக நெல்சன் மண்டெலா விளங்கினார். இன்றைய நவீன வரலாற்றில் அவர் ஒரு தேசத் தலைவராக உயர்ந்திருந்தார்.
தன்னுடைய பெருமைக்குரிய வாழ்க்கையின் பெரும் பகுதியை சிறையில் கழித்த இந்த பெரும் தலைவர் மண்டெலா, இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராக போராடி தென்னாபிரிக் காவில் உரிமையும் சுதந்திரமும் மதிப்பும் இன்றி துன்பத்தில் துவண்டு கொண்டிருந்த மக்களுக்கு புது வாழ்க்கையைப் பெற்றுக் கொடுத்தார்.
நெல்சன் மண்டெலா ஆபிரிக்க கண்டத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய ஒரு மாபெரும் தலைவர். ஆபிரிக்க நாடுகள் பொதுநலவாய அமைப்பில் பிராந்திய ரீதியில் அதிக அளவிலான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பிரதேசமாகும்.
நெல்சன் மண்டெலா அவர்களின் வாழ்க்கை முழு உலகத்திற்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்திருக்கிறது என்று ஜனாதிபதி தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார். பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த நாம் அனைவரும் தென்னாபிரிக்காவுக்கும் அதன் தேசத் தலைவரான நெல்சன் மண்டெலாவுக்கும் உரிய மதிப்பை வழங்க வேண்டுமாயின் அவர் பாடுபட்ட ஜனநாயக தாற்பரியங்களை பேணிப்பாதுகாக்க வேண்டுமாயின் பன்முகத்தன்மையிலும் ஒற்றுமையை வளர்க்கும் அவரது நல்லாலோசனையை கடைப்பிடிப்பது அவசியம் என்று ஜனாதிபதி அவர்கள் தமது செய்தியில் குறிப்பிட்டார்.