12/21/2013

| |

வேலூர், நீலகண்டராயன் பேட்டை சேரியில் சாதிவெறியர்கள் தாக்குதல்.

Photo de Paruthikulam Mathi Aadhavan.இன்று 18-12-2013 சாதிவெறிப்பிடித்த பா.ம.க வை சார்ந்த வன்னியர்களின் தாக்குதலுக்குள்ளான வேலூர் மாவட்டம், நீலகண்டராயன்பேட்டை, காட்டரம்பாக்கம், அரியூர், சோகனூர், பாராஞ்சி, நதிவெடுதாங்கல் ஆகிய சேரிகளை பார்வையிட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி ஒன்றிய, நகர மேலிடப் பொறுப்பாளர் பாசறை செல்வராசு, அண்ணன் விடியல் இரா.வெற்றித்தமிழன், காஞ்சி தென்றல் கலைக்குழுவைச் சார்ந்த தோழர் சந்தோசு Thendral Kalaikuzhu ஆகியோருடன் நான் சார்ந்திருக்கின்ற ஊடக மையம் Kanchi Vck சார்பில் நானும் சென்றிருந்தேன். தோழர் ஜோசுவா அவர்களின் உதவியினால் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த்தேசிய விடுதலைப் பேரவையின் வேலூர் மாவட்ட துணை செயலாளர் சரவணன், ஒன்றிய நிர்வாகி வேலாயுதம் ஆகிய தோழர்களுடன் சாதிவெறியர்களின் தாக்குதலுக்குள்ளான சேரிகளுக்கு சென்றிருந்தோம். நாங்கள் பார்வையிட்டதில்... கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டையிலிருந்து சோளிங்கர் - அரக்கோணம் செல்லும் வழியில் உள்ள நீலகண்டராயன்பேட்டை, காட்டரம்பாக்கம், அரியூர், சோகனூர், பாராஞ்சி, நதிவெடுதாங்கல் ஆகிய சேரிகளில் பா.ம.க.வை சார்ந்த சாதிவெறிப்பிடித்த வன்னியர்கள் 50 பேர் கொண்ட கும்பலாக முகத்தில் முகமூடி அணிந்துகொண்டு சேரிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். சேரியில் உள்ள தலித் மக்கள் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள், தொலைக்காட்சிப் பெட்டி, இருச்சக்கர வாகனங்கள், சேரியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள், தெரு விளக்குகள், ஆகியவற்றை அடித்து நொறுக்கி சேரிப் பெண்களையும், குழந்தைகளையும், ஆண்களையும் கட்டையில் ஆணிகளால் சுற்றப்பட்ட ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். முதலில் நீலகண்டராயன் பேட்டைசேரி.. இரண்டு பெண் காவலர்கள் மட்டுமே பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்தனர். சுமார் ௧௦ வீடுகளே இருக்கும் பகுதி இது. அனைத்து வீடுகளும் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள். இந்த வீடுகளின் கதவு, ஜன்னல், தொலைக்காட்சிப் பெட்டி, மீட்டர் பாக்ஸ், குடிநீர் குழாய், இருச்சக்கர வாகனங்கள் ஆகியவற்றை அடித்து சேதப்படுத்தி உள்ளனர். அந்தப் பகுதியைச் சார்ந்த லோகம்மாள் என்பவரிடம் விசாரித்தோம்.. என்னமா நடந்தது? உங்களைத் தாக்க என்ன காரணம்? என்று கேட்டோம். லோகம்மாள் கூறியது, ஒரு இருச்சக்கர வாகனத்தில் இருவர் பயணம் செய்து வந்தனராம். அவர்கள் போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. தடுமாறி கீழே விழுந்திருக்கிறார்கள். விழுந்தவர்களை தூக்கி எழுப்பி குடிக்க தண்ணீர் கொடுத்திருக்கிறார்கள். விழுந்ததில் ஒருவர் ஏய் சேரிக்காரனே நீ கொடுக்கின்ற தண்ணீர் வேண்டாம் எனக்கு என்று சொல்லியிருக்கிறார். இதனால் ஏதோ வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. விழுந்தவர்களும் எழுந்து சென்று விட்டார்கள். இந்த சம்பவம் நடந்தது 16-12-2013 மதியம். அன்று இரவு சுமார் 7.30 மணி இருக்குமாம். சேரியின் பின் பகுதியில் இருந்து 50 பேர் கொண்ட கும்பல் முகத்தில் முகமூடி அணிந்துகொண்டு சேரி வீடுகளை தாக்கியுள்ளனர். வயதான மூதாட்டி ஒருவரை காலில் தாக்கியுள்ளனர். பற தேவடியா பசங்களா வெளிய வாங்கடா என்று அழைத்து கையில் வைத்திருந்த ஆணிகளால் சுற்றப்பட்ட கட்டையில் சேரி ஆண்களை பலமாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குள்ளானவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனராம். இவரின் எதிர் வீட்டில் அனைவரும் ஊருக்கு சென்றிருந்தார்களாம். வீடு பூட்டப்பட்டு கிடந்ததாம். பூட்டப்பட்ட வீட்டின் கதவை கடப்பாரையினைக் கொண்டு தாக்கி சேதப்படுத்தினார்களாம். மற்றொரு அம்மாவிடம் விசாரித்தோம்.. இவர் வீட்டின் தொலைக்காட்சிப்பெட்டி, இருச்சக்கர வாகனம் ஆகியவற்றை அடித்து நொறுக்கியதுடன் பறத் தேவடியாலே உனக்கு எதுக்குடி ஜாக்கெட் என்று கூறி அந்தம்மாவின் ஜாக்கெட்டை கிழித்துள்ளனர். என் கைய கத்தியால அறுத்தான் ஒருத்தன். எங்க வீட்டுக்காரர் வந்தவுடன் என்னை விட்டுட்டு அவர புடிச்சி அடிச்சானுங்க. கிழிந்த ஜாக்கெட்டுடன் தான் காலை வரை இருந்தேன். காவல்துறையினர் தான் துணியை மாற்றிக்கொள்ளுங்கள். குளித்துவிட்டு வேற ஆடை போட்டுக்கொள்ளுங்கள். அதிகாரிகள் வந்து விசாரிப்பார்கள் என்றனராம். ஏதுமறியாத அந்தம்மா அவர்கள் சொன்னதைக் கேட்டு மாற்று உடை அணிந்து கொண்டிருந்தார். கிழிந்த அந்த ஜாக்கெட்டை எங்களிடம் காண்பித்து கண்ணீர் மல்க அழுது புலம்பினார். எங்களைப் பார்க்க இன்னும் எந்த அதிகாரிகளும் வரவில்லை. எல்லாம் இந்த ஊராட்சி மன்றத் தலைவர் சிதம்பரம் என்பவரின் தூண்டுதலில் தான் நடந்ததுள்ளதாக பயத்தில் கூறினர். இவர் பா.ம.க. வை சார்ந்தவராம். இந்த சாதிவெறிப் பிடித்த மிருகங்களின் அட்டூழியம் எப்போது அடங்கும். நீலகண்டராயன் பேட்டை சேரி மக்களின் கண்களில் இன்னும் பயம் குடிகொண்டிருக்கிண்றது. இதுவரை எந்த ஊடகமும் இந்த செய்தியினை வெளியிடவில்லை. ஏன் வெளியிட மறுக்கின்றன ஊடகங்கள்?