உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/10/2013

| |

இரணைமடு - யாழ் குடிநீர் திட்டத்துக்கு தமிழ்க் கூட்டமைப்பே முட்டுக்கட்டை

 யாழ்ப்பாணம், கிளிநொச்சி பேதங்களை உருவாக்கி குடிநீர் திட்டத்திற்கு இடையூறு
* கிளிநொச்சி விவசாயிகளுக்கு எவ்வகையிலும் பாதிப்பு ஏற்படாது
குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார்
வடக்கில் மூன்று இலட்சம் மக்கள் பயன்பெறக்கூடிய இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீர்த் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடையாக உள்ளதாக குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
20,000 மில்லியன் ரூபா செலவில் அரசாங்கமும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் இணைந்து செயற்படுத்தும் இத்திட்டத்தின் மூலம் மூன்று இலட்சம் மக்கள் பயன்பெறுவர். இதனை தடை செய்து தமது அரசியல் நோக்கத்தை இதன் மூலம் நிறைவேற்றிக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயலக்கூடாது எனவும் அவர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் மீதான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய சந்திரகுமார் எம்.பி., புதிதாக அமைக்கப்பட்டுள்ள வட மாகாண சபையும் மேற்படி குடிநீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;
விடுதலைப் புலிகளால் கூட அங்கீகாரம் வழங்கப்பட்ட இரணைமடு குடிநீர்த் திட்டத்தை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சிலர் தடுப்பது கவலையளிக்கிறது. இத்திட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமானால், திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவன் நானாகத்தான் இருக்கும் என்றும் முருகேசு சந்திரகுமார் எம். பி. தெரிவித்தார்.
வடக்கிற்கான பாரிய குடிநீர்த் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் பல திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்கள் நன்மை பெற்றுள்ளனர்.
கிளிநொச்சி நகர குடிநீர்த் திட்டம் 1650 மில்லியன் ரூபா செலவில் ஆரம் பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 17 கிராம சேவகர்கள் பிரிவைச் சேர்ந்த மக்கள் பயன்பெறவுள்ளனர்.
அறிவியல் நகர், சாந்தபுரம் பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக 400 மில்லியன் ரூபா செலவில் மேலும் ஒரு செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
20,000 மில்லியன் ரூபா செலவில் இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீர்த் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எனினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இத்திட்டத்துக்கு தடையாக உள்ளனர். கிளிநொச்சி- யாழ்ப்பாண மக்களுக்கிடையில் பேதங்களை ஏற்படுத்தும் நோக்கில் இவர்கள் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி விவசாயிகள் இத் திட்டத்தின் மூலம் பாதிக்கப்படுவர் என பிரசாரங்களைப் பரப்பி, குறுகிய அரசியல் நோக்கங்களை இலக்காகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட்டு வருகின்றனர். வட மாகாண சபையும் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
அரசியலுக்கு அப்பால் மக்கள் நலன் தொடர்பில் சிந்தித்து செயற்படாவிட்டால், இதன் பாதிப்பை எதிர்காலத்தில் வட மாகாண மக்களே அனுபவிக்க நேரும் என்பதால், அனைவரும் பொறுப்புடன் சிந்தித்து செயற்பட வேண்டும். இரணைமடு மூலம் யாழ்ப்பாணத்திற்கு நீர் கொண்டு செல்லும் திட்டம் கிளிநொச்சி விவசாயிகளை எந்தவகையிலும் பாதிக்காது.
இது தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டே இத்திட்டம் உறுதிப்படுத்தப்பட்டது. இத்திட்டம் மூலம் 4000 மில்லியன் ரூபா நிதி கிளிநொச்சி விவசாயிகளின் நலன்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வடக்கில் மூன்று இலட்சம் மக்கள் இதன் மூலம் பயன் பெறுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.