1/13/2014

| |

மூத்த எழுத்தாளர் அன்புமணி காலமானார்

பிரபல மூத்த எழுத்தாளரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மேலதிக அரசாங்க அதிபருமான அன்புமணி இராசையா நாகலிங்கம் தனது 78ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மாலை காலமானார்.
ஆரையம்பதியைச் சேர்ந்த 07 பிள்ளைகளின் தந்தையான இவர், கல்லடியில் விபத்தில் சிக்கி கடந்த 02 மாதங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.
'
அன்புமணி' என்ற  புனைப்பெயரில் அறிமுகமான இவரின் முதல் ஆக்கம் 'கிராம்போன் காதல்' என்னும்  தலைப்பில் இந்தியாவிலிருந்து வெளிவரும் கல்கி இதழில் 1954ஆம் ஆண்டு; பிரசுரமாகியிருந்தது.
'தந்தையின் கதை' என்னும் சாஹித்ய மண்டல விருது பெற்ற நாவல் உட்பட 05 நாவல்களையும் ஏனைய  துறைசார்ந்த பல நூல்களையும் இவர்  எழுதியுள்ளார்.
மேலும், இவர் அன்புமணி கலாபூஸணம், தமிழ்மணி, கலைமாமணி, இலக்கியமணி, இலக்கியவேந்தர் உள்ளிட்ட விருதுகளை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பெற்றுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான இவர், மட்டக்களப்பு மாவட்ட தலைமையக உதவி அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், வட கிழக்கு மாகாண ஆளுநரின் உதவிச் செயலாளர் உள்ளிட்ட  பதவிகளை வகித்திருந்தார்.
இவரது இறுதிக்கிரியை ஆரையம்பதி இந்து மயானத்தில் இன்று திங்கட்கிழமை  மாலை நடைபெறுமென உறவினர்கள் தெரிவித்தனர்.