1/14/2014

| |

மிதக்கும் நூலக கப்பலின் கண்காட்சியை முதலமைச்சர் பார்வை


திருகோணமலை துறைமுகத்தில் நங்குரமிடப்பட்டுள்ள லோகோஸ் ஹோப் எனும் உலகின் மிதக்கும் நூலக கப்பலில் இடம்பெறும் புத்தக கண்காட்சியை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்  ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.

இதன்போது  முதலைச்சருக்கு ஞாபகார்த்த சின்னமொன்று கப்பலின் கெப்படனால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கை துறைமுக அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பொறியியலாளர் எஸ்.ஏ.முகம்மட் பௌசியும் கலந்துகொண்டார்.  

கடந்த வெள்ளிக்கிழமை முதல் மிதக்கும் நூலக கப்பலில் இடம்பெறும் இந்த புத்தக கண்காட்சி புதன்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. 127 மீற்றர்கள் நீளம் கொண்ட இக்கப்பல்  7 அடுக்குளைக் கொண்டது. இதில் 60 நாடுகளைச் சேர்ந்த 400 பேர் தொண்டர்களாக பணியாற்றுகின்றனர். 

இக்கப்பலில் நான்காவது தளத்தில் நூல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள பார்வையிடுவதற்கு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருவருக்கு கட்டணமாக 50 ரூபாய் அறிவிடப்படுகின்றது. சிறுவர்களுக்கும் பாடசாலை சீருடையில் வரும் மாணவர்களும் இலவசமாக இதனை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றார்கள்.

பொதுமக்களின் நலன் கருதி இலங்கைதுறைமுக அதிகார சபையின்  அஷ்ரப் இறங்குதுறையின் பிரதான  நுழைவாயிலில் இருந்து  கப்பல் தளம் வரையான 2கி.மீற்றர் தூரத்திற்கு லோஹோ ஹோப் நிறுவனத்தால் இலவசபோக்குவரதது வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட வாகனங்களில் வருவோர் தமது வாகனங்களை பிரதான நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் வளர்ந்தவர்கள் அடையாள அட்டையை எடுத்து வருமாறும் கேட்கப்பட்டுள்ளது.எக்காரணம் கொண்டும் வெளியாரது வாகனங்கள் துறைமுக வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என இலங்கை துறைமுக அதிகார சபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.