1/17/2014

| |

காங்., மாநாட்டில், பிரதமர் வேட்பாளராக, ராகுல்?

டில்லியில் நடக்கவுள்ள, காங்., மாநாட்டில், பிரதமர் வேட்பாளராக, ராகுல் அறிவிக்கப்படுவது குறித்து, காங்கிரசுக்குள், கருத்து வேறுபாடு, எழுந்துள்ளது.

நேற்று முன்தினம், வட மாநில பத்திரிகைக்கு, பேட்டியளித்த ராகுல், 'காங்கிரஸ் கட்சி, எத்தகைய பொறுப்பை அளித்தாலும், அதை ஏற்று செயல்படுவதற்கு, தயராகவே உள்ளேன்' என கூறியிருந்தார்.நாளை டில்லியில், அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில், பிரதமர் வேட்பாளராக, ராகுல் அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்ப்பு நிலவி வந்தது.ஆனால், 'பிரதமர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை, இப்போது செய்ய வேண்டாம்' என, சோனியா ஆலோசகர் அகமது படேல், கட்சிப் பொதுச் செயலர் திக்விஜய்சிங் உள்ளிட்ட, பல மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது:ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலுக்கு பின், காங்கிரசுக்கு இறங்குமுகமாக உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், ராகுலை, பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது சரியல்ல. மூத்த தலைவர்கள் சிலர் வலியுறுத்துகின்றனர்.ஆனாலும், கட்சிக்குள் இருக்கும் இளைய தலைமுறை தலைவர்கள் பலரும், ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதே, சரியென்று வாதிடுகின்றனர். இத்தகைய குழப்பமான சூழ்நிலை நிலவுவதால், காங்கிரஸ் மாநாட்டில், ராகுல் பெயர், பிரதமர் வேட்பாளருக்கு என, அறிவிக்கப்படுவதில் சந்தேகமே. அதற்கு பதிலாக, கட்சியின் செயல் தலைவராக, அவர் அறிவிக்கப்படலாம்.இவ்வாறு, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, டில்லியில் நேற்று நடந்த காங்., உயர்மட்டக் குழு கூட்டத்தில், முதல் முறையாக, ராகுல் பங்கேற்றது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.