2/11/2014

| |

நவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவணம்* கட்சியின் பொதுச் செயலர் விக்கிரமபாகு கருணாரட்ன,
* சத்தியக் கடதாசி வழங்கிய சட்டத்தரணி,
* உறுதிப்படுத்திய Nஜ. பி. ஆகியோருக்கு கம்பஹா பொலிஸ் அழைப்பு
குற்றம் நிரூபிக்கப்படின்
இரண்டு வருட சிறைத் தண்டனை; வாக்காளர் இடாப்பிலிருந்து 7 வருடங்கள் பெயர் நீக்கம்; மாகாண சபை உறுப்புரிமை நீக்கம்
மேல் மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக நவசமசமாஜக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள 15 பேரின் பெயர், விபரங்கள் போலியானது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளன.
இதற்கமைய, மேற்படி வேட்பு மனுவில் கையொப்பமிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் விக்கிரமபாகு கருணாரட்ன, சத்தியக் கடதாசி வழங்கிய சட்டத்தரணி மற்றும் உறுதிப்படுத்திய சமாதான நீதவான் ஆகியோரை பொலிஸ் நிலையத்தில் இன்று (11ம் திகதி) ஆஜராகுமாறு கம்பஹா பொலிஸ் நிலையம் அழைப்பு விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
போலி ஆவணங்கள் தயாரிப்பது 1988ம் ஆண்டின் 2ம் இலக்க மாகாண சபை தேர்தல் சட்டத்தின் 66வது பிரிவின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றமாகும். இதன் பிரகாரம் இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:-
நவ சமசமாஜ கட்சியினால் கடந்த 6ம் திகதி தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கம்பஹா உதவித் தேர்தல் ஆணையாளர் சுனில் சேனாரத்ன பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நவ சமசமாஜ கட்சியின் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள 39 வேட்பாளர்களில் மூன்று வேட்பாளர்களின் பெயர், விபரங்கள் போலியானது என்றும் மற்றுமொருவர் வெளிநாட்டில் உள்ளவர் என்றும் தெரியவந்தது.
இந்நிலையில் தொடர்ந்தும் விரிவான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 39 பேரில் 15 பேரது பெயர், விபரங்கள் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே கட்சியின் பொதுச் செயலாளர் விக்ரமபாகு கருணாரத்னவுக்கும், சத்திய கடதாசி வழங்கிய சட்டத்தரணிக்கும் சமாதான நீதிவானுக்கும் பொலிஸ் அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தவறான முறையில் போலி ஆவணங்களை, வேட்பு மனுவை தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
அவ்வாறு குற்றவாளியாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்க முடிவதுடன் இது தவிர குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து 7 வருடங்கள் வாக்காளர் இடாப்பில் பெயரை உள்ளடக்கவோ, வாக்களிக்கவோ, மாகாண சபை உறுப்பினராகவே தெரிவு செய்யப்பட முடியாது என்றும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.