2/07/2014

| |

53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்தில் திரும்பினர்

சட்டவிரோதமாக வள்ளங் கள் மூலம் அவுஸ்திரேலியா சென்று தங்கியிளுக்கும் இலங்கையருள் 53 பேரை அவுஸ்திரேலியா திருப்பிய னுப்பியுள்ளது. இதில் 8 பேர் சுயவிருப்பத்தின் பேரிலேயே நாடு திரும்பியுள்ளனர். குறித்த 53 பேரும் நேற்று அதிகாலை விசேட விமானம் மூலம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கியதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவிக்கிறது.
ஆழ்கடல் வழியாக வள்ளங்கள் மூலம் அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். குறித்த 53 பேரும் சுமார் ஒரு வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கிறிஸ்மஸ் தீவில் திறந்தவெளி தடுப்பு முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 45 பேரை திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது மேலும் 8 இலங்கையர் சுய விருப்பத்தின் பேரில் நாடு திரும்ப முன்வந்ததாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் அறிவிக்கிறது.
அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரி ஸ்கொட்மொரிசன் தெரிவிக்கையில் : சுயவிருப்பத்தின் பேரில் நாடு திரும்பவிருப்பம் தெரிவிப்பவர்களுக்கு அவர்கள் நாடு திரும்பியதும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவிகள் வழங்க அவுஸ்திரேலியா ஆயத்தமாக இருக்கிறது என்றும் சட்டவிரோதமாக வருபவர் எவரானாலும் நாட்டுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் கூறினார்.
இவ்வாறு சட்டவிரோதமாக வருபவர்கள் கிறிஸ்மஸ்தீவு அல்லது பப்புவா நியூகினி அல்லது சொந்த நாட்டுக்கு அப்போதே திருப்பி அனுப்பப்பட்டு விடுவார்கள் என்றும் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியா சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மொரிசன் தெரிவித்தார்.