2/16/2014

| |

மாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா? எதுவானாலும்

தெரிவுக்குழுவிலேயே இறுதித் தீர்வு இந்தியாவின் நிலைப்பாடும் இதுவே

அமைச்சர் பசில் திட்டவட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன் நிபந்தனைகள் எதனையும் விதிக்காமல் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வந்தால் மட்டுமே அதிகாரங்கள் குறித்து கலந்துரையாட முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஷபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சென்னையில் தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் பசில் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
சென்னை அடையாறில் இந்திய தெற்காசிய ஆய்வு மையத்தில் இடம்பெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் இலங்கையின் இன்றைய போக்கு என்ற தலைப்பில் உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு எவ்வாறான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோ அதுபோன்ற அதிகாரங்களையே இலங்கையிலும் எதிர்பார்க்கிறோம். இலங்கையில் வட கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களுக்கு உரிமையை வழங்கும் வகையில் அரசியலமைப்பின் 13 ஆவது சட்டத்திருத்தத்தை அமுல்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டது. ஆனால், இலங்கை அரசாங்கம் அந்தச் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவில்லை என்றார்.
இரா. சம்பந்தன் சென்னையில் தெரிவித்த கருத்து குறித்து அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறுகையில், இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கோருகின்றது. ஏனைய கட்சிகள் வேறுவிதமான யோசனையை முன்வைக்கின்றன. அனைத்து விடயங்கள் குறித்தும் பாராளு மன்றத் தெரிவுக்குழுவிலேயே பேச முடியும்.
இந்தியாவில் மாநிலங் களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களோ அல்லது எவ்வாறான அதிகாரங்கள் குறித்தும் கலந்துரையாட முடியும். எனவே தெரிவுக் குழுவுக்கு வாருங்கள், நாங்கள் இதுபற்றி அங்கு கலந்துரையாடுவோம்.
எனவே அனைத்து கோரிக்கைகள் மற்றும் யோசனைகள் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிலேயே கலந்துரை யாடி தீர்மானம் ஒன்றை எடுக்க முடியும். எனவே தமிழ்க் கூட்டமைப்பினர் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இணைந்துகொண்டு தமது நிலைப்பாட்டையும் யோசனையையும் முன்வைக்க முடியும்.
எனினும் முன் நிபந்தனை விதிக்காமல் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமிழ்க் கூட்டமைப்பு வர வேண்டும். முன் நிபந்தனைகளின் விதிப்பானது சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே முன்நிபந்தனை விதிக்காமல் கூட்டமைப்பு தெரிவுக் குழுவுக்கு வரவேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமக்கு தேவையான அதிகாரங்கள் தொடர்பாக வெளியில் இருந்து கூறிக்கொண்டிருப்பதைவிட பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வந்து கூறுவதே பொருத்தமானதாக அமையும் என்றார்.