3/26/2014

| |

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எமது அரசியலில் தலையிடுவதன் மூலமாக இங்குள்ள நிலைமையை மோசமாக்கி விட கூடாது.

இன்று கொழும்பு மாவட்டத்தில் நாம் சிறுபான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது மக்களினதும், வர்த்தகர்களினதும் பாதுகாப்பு முக்கியமானதாகும். வாக்குகளை பெறுவதற்காக வடக்கு அரசியலை இங்கு மையமாக கொண்டு செயல்பட முனைந்தால் கொழும்பில் வாழும் வட, கிழக்கு மக்கள் உட்பட அனைத்து மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என வெள்ளவத்தை பொலிவுட் உணவகத்தில் தொழிலதிபர் கே.சுகுமார் ஏற்பாட்டில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

கடந்த காலங்களிலே கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் தமக்கு தேவையானவர்களுக்கும் சேவையாற்றியவர்களுக்கும் வாக்களித்து வந்தனர். இதன் மூலமாக கொழும்பு மாவட்ட மக்கள் மத்தியிலே அமைதியான சூழ்நிலையே ஏற்பட்டிருந்தது. ஆனால் இன்று வாக்குகள் பெறுவதற்காக வடக்கு அரசியலை கொழும்பில் நடத்த முற்படுகின்றார்கள். இதற்கு வட மாகாண அரசியல்வாதிகள் துணைபோவார்களேயாயின் காலம் அவர்களது தவறுகளை சுட்டிக் காட்டும். 

வட மாகாணசபை சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஆளுநர்களாக இராணுவத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட கூடாது. இராணுவம் - பொது மக்கள் இடங்களை மீளவும் கையளிக்க வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். காணாமல் போனவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். ஜெனீவா மூலமாக தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு கிடைக்கப்பெற வேண்டும் என இப்படி பல விடயங்களை தொடர்ச்சியாக நான் வலியுறுத்தி வருகின்றேன். இது வட, கிழக்கு மக்களுக்கான தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெரியவர் சம்பந்தனையும், முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் நான் பெரிதும் மதிக்கின்றேன். 

இன்று கொழும்பு  மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எமது அரசியலில் தலையிடுவதன் மூலமாக இங்குள்ள நிலைமையை மோசமாக்கி விட கூடாது. இன்று முற்றாக ஒழிக்கப்பட்டதாக சொல்லும் விடுதலைப்புலிகளை தேடுவதாக சொல்லி வட மாகாண மக்களின் அமைதியை இராணுவத்தினர் தொலைத்து வருகின்றனர். இப்படியிருக்கும் பொழுது, இதே நிலைமையை கொழும்பு மாவட்டத்தில் ஏற்படுவதற்கு நாம் இடங்கொடுக்க முடியாது. 

தமிழ் மக்கள் தமிழர்களுக்கே வாக்களித்து தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிலரை கடந்த மாநகரசபை தேர்தலுக்கு ஆதரவளிக்க வைத்து கிடைக்கப்பெற்ற இருபத்தெட்டாயிரம் விருப்பு வாக்குகள் மூலமாக இன்று கொழும்பு மாநகரசபையில் பதவி வகிப்பது பெரும்பான்மை இனத்தவர் என்பதையும் தமிழ் தேசியம் தெரிந்து கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரையிலே கல்வி, வீடமைப்பு, அடிப்படை வசதிகள், எனது மக்களின் பாதுகாப்பு அனைத்திலும் மலையகம், வடகிழக்கு கொழும்பு தமிழர்கள் என்ற பேதமின்றி அனைவருக்கும் சேவையாற்றி வருகின்றேன். இந்த இறுதி சந்தர்ப்பத்தை தவறவிடாது மக்கள் சிந்தித்து வாக்குகளை பிரித்து செலுத்தினால் அதிகபட்ச தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.