4/16/2014

| |

கனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்டு முயற்சிகளுக்கு எதிரான செயற்பாடாகும்

வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கண்டனம்
கனடா அரசாங்கம் தனது விருப்பத்தின் பேரில் பொதுநலவாய அமைப்புக்கு வழங்கும் நிதியை இடைநிறுத்துவதென்று விடுத்த அறிவித்தல் எமக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் நேற்றுத் தெரிவித்தார்.
2013ல் கொழும்பில் நடைபெற்ற சோகம் மகாநாட்டில் கனேடிய பிரதம மந்திரி கலந்து கொள்வதில்லை என்று அறிவித்த போதே இந்த நிதி வழங்கும் செயற்பாடு இடை நிறுத்தப்படும் என்பதை நாம் அறிந்திருந்தோம் என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் கனேடிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஓராண்டுக்கு முன்னர் நாம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது கனடா, பொதுநலவாய அமைப்பு உட்பட சர்வதேச அமைப்புகளுக்கு வழங்கும் நிதியை நிறுத்துவது பற்றி ஆராய்ந்து வருவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது என்றும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அறிவித்தார்.
இவ்விதம் சில நாடுகள் பொதுநலவாய அமைப்புக்கு நிதியை வழங்கி தங்கள் செல்வாக்கை பிரயோகிக்க நினைப்பது பற்றி பல அங்கத்துவ நாடுகள் ஏற்கனவே அவதானத்தை செலுத்தி வந்ததாகவும் கனடாவின் இன்றைய தீர்மானம் அதற்கு ஒரு சிறந்த ஆதாரமாக விளங்குகிறதென்றும் கூறினார்.
கனேடிய அரசாங்கம் தன்னிச்சையாக வழங்கும் நிதியை அரசியல் ஆதாயமாகப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டில் தமக்கு இருக்கும் வாக்குப் பலத்தை அடிப்படையாக வைத்து செயற்படுவதாகவும் அவர் கூறினார். தனது வாக்காளர்களை திருப்திப்படுத் துவதற்காக கனடா பொதுநலவாய அமைப்பை இவ்விதம் துன்புறுத்துவது தவறு என்றும் கூறினார். கனேடிய அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் இலங்கையின் நல்லிணக்க செயற்பாட்டை உதாசீனம் செய்வதாக அமைந்திருக்கிற தென்றும் அவர் கூறினார்.
இலங்கை அரசாங்கம் யதார்த்தபூர்வமான கால எல்லைக்குள் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தீர்வையே எங்கள் நாட்டுப் பிரச்சினைக்கு தீர்வினை ஏற்படுத்துவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளதாக அவர் கூறினார்.