6/04/2014

| |

சிறிலங்காவில் வேறு எந்தவொரு முதலமைச்சரின் அலுவலகத்துக்கும் 3 லட்சம் ரூபா வாடகை வழங்கப்படுவதில்லைவடக்கில் தமிழ் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி இருக்கின்ற நிலையிலும் வன்னியில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களிலுள்ள குழந்தைகள் புட்டிப்பாலுக்கு அழுகின்ற நிலையிலும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தியோபூர்வ இல்லத்திற்கும் அலுவலகத்திற்கும் மாதாந்தம் மூன்றரை இலட்சம் ரூபா வாடகை செலுத்தப்படுகின்றமை தொடர்பாக வடமாகாணத்திலுள்ள பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களுக்கான அரசு என்றிருக்கின் வடக்கு மாகாண சபையின் முதல்வர் இப்படி பெருந்தொகைப் பணத்தை வாடகையாகச் செலுத்துவதன் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பெரும் துரோகம் இழைக்கின்றது என்றும் வடக்கிலுள்ள புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து வடக்கு தனியே பிரிக்கப்பட்ட பின்னர் அதற்கான தனியான கட்டமைப்பு வசதிகள் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்படவில்லை. மாங்குளத்தில் அது அமைவதே பொருத்தம் என்ற எண்ணக்கரு திட்ட அளவில் இருக்க தற்காலிகமாக சபையின் அனைத்து அலுவலகங்களும் யாழ்ப்பாணத்தில் இயங்குகின்றன. அவற்றில் அதிகமானவை வாடகை வீடுகள் மற்றும் கட்டங்களிலேயே இயங்குகின்றன.
வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகம் அவரது உத்தியோகபூர்வ இல்லம் என்பனவும் இதுவரை நிரந்தரமாக அமைக்கப்பெறவில்லை. முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவரது விருப்பத்துக்கேற்பவே அலுவலகத்துக்கான கட்டடமும் உத்தியோகபூர்வ இல்லத்துக்கான வீடும் வாடகைக்கு அமர்த்தப்பட்டன என்று சபை நிர்வாகிகள் கூறுகின்றன.
இதனடிப்படையில் முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபா வாடகையும் அலுவலகத்துக்கு மாதாந்தம் 3 லட்சம் ரூபாய் வாடகையும் வடக்கு மாகாண சபையினால் வழங்கப்படுகின்றன. சிறிலங்காவில் வேறு எந்தவொரு முதலமைச்சரின் அலுவலகத்துக்கும் 3 லட்சம் ரூபா வாடகை வழங்கப்படுவதில்லை என்று மாகாண சபைகள் அமைச்சு கூறுகின்றது. வடக்கு மாகாண ஆளுநரும் போர்க்குற்றவாளியுமான சந்திரசிறி ஊடாக ஜனாதிபதிக்கு விசேட கோரிக்கை விடுக்கப்பட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ச அனுமதித்ததன் அடிப்படையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அலுவலகம் 3 லட்சம் ரூபா வாடகைக்கு அமர்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வளவு பெரும் தொகை வாடகை கொடுக்கப்படுகின்ற போதும் முதலமைச்சரின் உத்தியோகபூர்வ சந்திப்புக்கள் தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் செல்லும் செய்தியாளர்களை அலுவலகத்தின் உள்ளே அழைத்து இருத்திப் பேசுவதற்குப் போதிய இடவசதி இல்லை அங்கில்லை என்று சில நாள்களுக்கு முன்னர் பத்திரிகை ஆசிரியர்களுக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் முதலமைச்சர் கவலை தெரிவித்திருந்தார்.
சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் மேற்கொண்ட கடும் யுத்தம் காரணமாக இந்த மாகாணம் பெரும் அழிவைச் சந்தித்துள்ளது. இங்குள்ள மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். வன்னியில் உள்ள மக்கள் அன்றாடம் ஜீவனோபாயத்திற்கே அல்லாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் வடக்கு முதல்வர் வாடகைப் பணமாக மூன்றரை இலட்சம் ரூபாவைச் செலுத்துவது மக்களை ஏமாளிகளாக்கும் செயல் என்றும் மேற்படி புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.