6/14/2014

| |

கிழக்கின் கிராமிய வழிபாட்டுக்கு பிரசித்திபெற்ற கோராவெளி கண்ணகியம்மன் ஆலய திருச்சடங்கு

கிழலக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்கதும் மிகவும் சிறப்பு வாய்ந்ததுமான மட்டக்களப்பு கிரான் கோராவெளி கண்ணகியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இலட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இன்று காலை கதவு திறக்கப்பட்டு ஆலயத்தின் திருச்சடங்கு சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமியத் தெய்வ வழிபாட்டிற்கு பிரசித்தி பெற்ற இடமாக கோராவளி அமைந்துள்ளது.
மருதமும் , குறிஞ்சியும் ஒருங்கே அமையப் பெற்ற இக்கிராமத்தில் கோயில் கொண்டுள்ள கோராவளி கண்ணகி அம்மனுக்கு நேற்று புதன்கிழமை ஆரம்பமாகி இன்று வியாழக்கிழமை திருக்குளிர்த்தி பாடுதலுடன் நிறைவுபெற்றது.
வருடாந்தம் கோரவெலிக்கு தமது கிராமங்களில் உள்ள அம்மனைக்கொண்டுசென்று பந்தல் அமைத்து கோராவெளி கண்ணகியம்மனுடன் ஏழு கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த திருச்சடங்கினை சிறப்பாக நடாத்துகின்றனர்.
கிரான்,கோரகல்லிமடு,சந்திவெளி,சித்தாண்டி,முறக்கொட்டாஞ்சேனை,கிண்ணையடி,மீராவோட ஆகிய பிரதேசத்தினை சேர்ந்த மக்களும் கோராவெளி அம்மன் ஆலயத்தில் பந்தல் அமைத்து தமது கிராமங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட கண்ணகியம்மனை வைத்து இந்த திருச்சடங்கினை நடத்தினர்.
வாழைச்சேனை பிரதேச செயலகத்துடன் பிரதேச பண்ணையாளர் சங்கமும் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன் வாழைச்சேனை பிரதேச சபை மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் வாழைச்சேனை பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த உற்சவத்தில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டதுடன் திருச்சடங்குகள் தடையின்றி நடைபெறுவதற்கான ஏற்பாட்டு ஒழுங்குகள் தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.