7/27/2014

| |

பலாச்சோலை கிராமத்தில் யானை தாக்கியதில் ஒருவர் பலி

batti_d.jpgமட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவின் பலாச்சோலை கிராமத்தில் (25.07.2014) காலை 6.30 மணியளவில் யானை தாக்கியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் கதிர்காமத்தம்பி நடராஜா(வயது 61) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ,காயமடைந்தவர்கள் பவளசிங்கம் பூபாலரெத்தினம்(வயது 39),கேதாரம் அமிர்தலிங்கம் (வயது 21) ஆவர்.
காயமடைந்தவர்கள் இருவரையும் யானை வீதியில் வைத்து தாக்கியுள்ளதுடன் கொல்லப்பட்டவரை வளவிற்குள் வைத்து பல தடைவை தாக்கி மரத்தில் தூக்கியும் அடித்துள்ளது.
தாக்கிவிட்டு வீதியால் சென்ற யானை காயமடைந்த இருவரையும் தாக்கியுள்ளது. அத்துடன் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி சின்னவத்தை கிராமத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரும் காயமடைந்துள்ளார்.
ஸதலத்திற்கு விரைந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் கிராம மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பல தடைவை கிராமத்தை விட்டு வெளியேற எத்தணித்தபோதும் கிராம மக்கள் விடவில்லை.
யானை கிராமத்திற்கு வந்தவுடன் 6 மணிக்கு அதிகாரிகளுக்கு அறிவித்தும் 10 மணிக்கே வந்ததாக கிராமமக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் எங்களுக்கு வர வாகனம் இல்லை சொந்த வாகனத்திலேயே வந்தோம். அத்துடன் மாவட்டத்திற்கு மூவரே உள்ளோம் என்கின்றனர் அதிகாரிகள்.
இறுதியாக அதிகாரிகள் செல்ல எத்தணித்தபோது பெண்கள் வழிமறித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.யானையை துரத்திவிட்டு செல்லும்படி கேட்டுக்கொண்டனர்.
இராணுவத்தினரின் சமரச முயற்சி வாக்குறுதியை அடுத்து அதிகாரிகளை சின்னவத்தை கிராமத்திற்கு செல்ல பல மணிநேரத்தின் பின் கிராம மக்கள் அனுமதித்தனர்.