7/21/2014

| |

வடமாகாண சபை எனது கனவு: டக்ளஸ்

வடமாகாண சபை எனது கனவு: டக்ளஸ்


வடமாகாணசபை என்னுடைய கனவு. அது என்னுடைய கைகளுக்கு கிடைத்திருந்தால் மூன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் செல்வம் கொழிக்கும் மாவட்டங்களாக வடமாகாணத்திலுள்ள மாவட்டங்களை மாற்றியிருப்பேன். ஆனால் துரதிஷ்டவசமாக எனது கைகளுக்கு கிடைக்காமல் போய்விட்டது என்று பாராம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா நேற்று   ஞாயிற்றுக்கிழமை (20) தெரிவித்தார்.


வாடகை முச்சக்கரவண்டி உரிமையாளருக்கான மரண சகாயநிதி உதவித்திட்டம் அறிமுகப்படுத்தும் விழா இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'எமது மக்களுக்காகத் தான் நான் அரசியலில் அங்கம் வகிக்கின்றேன். அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் தான் நான் மக்களை பாதுகாக்கவோ மக்களுக்கு உதவவோ வழிகாட்டவோ முடிகிறது' என்றார். 

'என்னுடைய தனிப்பட்ட விருப்பங்களுக்காக மக்களை அடகு வைக்க முடியாது. என்றும் மக்களுக்கு உதவ வேண்டுமென்றால் நான் அரசாங்கத்தில் இருக்க வேண்டும். அதிகாரத்தைக் கொண்டுதான் மக்களின் பிரச்சினைகளை, நியாயமான கோரிக்கைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும்' என்று சுட்டிக்காட்டினார். 

'முச்சக்கரவண்டி உரிமையாளருக்கான மரண சகாயநிதியோடு மட்டும் நின்றுவிடாது மேலதிகமான வருவாயை ஈட்டக்கூடிய வகையில் பல திட்டங்களை செயற்படுத்தவுள்ளோம். முச்சக்கரவண்டி சங்கத்தின் கீழ் அனைத்து சாரதிகளும் பதிவை மேற்கொண்டு சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். 

என்றும் மக்கள் சரியான நிலைப்பாடு எடுக்கின்ற பட்சத்தில் சாரதிகளுக்குரிய ஓய்வூதியம் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இருக்கின்ற பொலிஸ் மற்றும் தரிப்பிடவசதி பிரச்சினைகளையும் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி என்னால் திட்டங்களைச் செயற்படுத்த முடியும்' என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.