8/13/2014

| |

பொத்துவில் வரை புகையிரத சேவையை நீடிப்பது அம்பாறை மாவட்ட மக்களுக்கு பெரும் விமோசனம்

புகையிரத சேவை என்பது நாட்டு மக்களின் போக்குவரத்துத் தேவையினை சிறப்பாக நிறைவு செய்வதற்கு உதவுவதுடன், நாட்டிற்கு வருமானத்தையும் ஈட்டித் தருகின்றது.
இலங்கையில் புகையிரத போக்குவரத்து சேவை சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அதேவேளை யாழ்ப்பாணம் வரையும் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நடவடிக்கையினால் போக்குவரத்துத்துறை பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது.
அம்பாறை மாவட்ட மக்களின் மிக நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகின்ற கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு வரையுள்ள புகையிரத சேவையை பொத்துவில் வரை நீடிப்பதற்கான செயல்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆவண செய்யப்பட வேண்டும் என்பது இப்பிரதேச மக்களின் கோரிக்கையாகும். இதில் முதற்கட்டமாக மட்டக்களப்பு முதல் ஒலுவில் வரையான புகையிரத சேவையினை ஆரம்பிக்க முடியும்.
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் வேண்டுகோளுக்கிணங்க ஈரான் அரசினால் மட்டக்களப்பு - பொத்துவில் வரையான புகையிரதப் பாதை வரைபடம் தயாரிக்கப்பட்டு புகையிரதப் பாதை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் நேரத்தில் யுத்தம் தலைதூக்கியது. இந்தத் திட்டம் அப்போது தடைப்பட்டது. தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் நாட்டில் பாரிய அபிவிருத்திப் புரட்சி ஏற்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் இந்த புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டால், அம்பாறை மாவட்ட மூவின மக்களும் நன்மையடைவர்.
சுனாமி அனர்த்தத்தின் பின்னர் கரையோரப் பிரதேசத்தில் கடற்கரையிலிருந்து 65 மீற்றர் எல்லைக்குள் மக்கள் குடியிருக்க முடியாது என்ற அரச வர்த்தமானி அறிவித்தலையடுத்து பொத்துவில் வரையான ரயில் பாதையை நிர்மாணிப்பது சாத்தியமாகியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் துறைமுகம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இப் பிரதேச அபிவிருத்தி சாத்திமாகியுள்ளது. பொருளாதார வர்த்தகத்துறையில் முன்னேற்றம் ஏற்படுமென்பதில் ஐயமில்லை.
இந்த மீன்பிடித்துறைமுக பிரதேசம் ஊடாக புகையிரதம் செல்லும்போது பொருட்கள். பண்டங்களை ஏற்றி இறக்கும் இலகு நிலை உருவாகும். அத்துடன் எதிர்காலத்தில் படித்த இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு பிரயாணம் செல்பவர்களில் பெரும்பாலானோர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மூவின மக்களாவர். குறிப்பாக ஹிங்குரான, இங்கினியாகல, பொத்துவில், பாணம, லஹுகல, அறுகம்மை போன்ற 200 கிலோ மீற்றர் தூரத்தில் வசிப்பவர்களும் மட்டக்களப்பிற்கு ரயிலில் வந்து பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பிரயாணங்களை மேற்கொள்கின்றனர்.
அதுபோல் கிழக்குப் பிரதேசத்தில் இசை நடனக் கல்லூரி (கல்லடி), தென்கிழக்கு பல்கலைக்கழகம் (ஒலுவில்), ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை (அட்டாளைச்சேனை) மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள், கல்வியியற் கல்லூரிகள், பாடசாலைகள் எனப் பிரபல்யமான இடங்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இலங்கையின் நாலா புறத்திலிருந்தும் மாணவர்களும் அரச அதிகாரிகளும் வருகின்றனர். இவர்களுக்கு இப்புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டால் பெரும் நன்மை கிடைக்க வாய்ப்புண்டு.
மேலும் வியாபார கேந்திர நிலையங்கள் உள்ள இப்பிரதேசத்தில் பொருட்கள், பண்டங்களை ஏற்றி, இறக்க வர்த்தகர்களுக்கு போதிய வசதிகள் இச்சேவையினால் கிடைக்கும்.
எனவே மட்டக்களப்பு, பொத்துவில் வரையான புகையிரத சேவையை ஆரம்பிப்பதன் மூலம் புகையிரத திணைக்களத்திற்கும் போதிய வருமானம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.