9/16/2014

| |

சீனாவும் இலங்கையும் இன்று 20 ஒப்பந்தங்களில் கைச்சாத்து

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இன்று (16) இலங்கை வருகிறார். இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளார்.
மூன்று பில்லியன் ரூபா முதலீடுகளுடன் இன்று இலங்கை வரும் சீனா ஜனாதிபதிக்கு இன்று கொழும்பில் கோலாகல வரவேற்பளிக்கப்படவுள்ளன.இதனையொட்டி கொழும்பு மா நகர் சீன, இலங்கை கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் இரு நாட்டு 
ஜனாதிபதிகளின் பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. சீன ஜனாதிபதியின் வருகையையொட்டி அதிவேக பாதைகள், நெடுஞ்சாலைகள், துறைமுகம், மின்சாரம், கலாசாரம் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் சீன ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்படவுள்ளது. அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளால் சீன ஜனாதிபதி விமான நிலையத்தில் வரவேற்கப்படுவார்.
இதற்கு மேலதிகமாக சீன ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. இதேவேளை, ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுதல், கலாசார நிலையம் ஒன்றிற்காக நினைவுப் படிகத்தை திரைநீக்கம் செய்தல், நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் செயற் றிட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தல் ஆகிய அம்சங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்தே முன்னடுக்கப்பட விருப்பதாகவும் தெரியவருகிறது.
இரண்டாம் நாளான நாளை காலை சீன ஜனாதிபதி கொழும்பு துறைமுகத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். அதனைத் தொடர்ந்து பிரதமர் தி.மு.ஜயரட்ண மற்றும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆகியோரையும் சீன ஜனாதிபதி தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
புதியதொரு பொற்காலம்
சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளில் புதியதொரு பெற்காலமாக அமைந்துள்ளது. 21ஆம் நூற்றாண்டின் பட்டுப்பாதைத் திட்டத்தைக் கொண்டுவரும் சீனாவின் முயற்சிகளுக்கு இந்த விஜயமானது உறுதுணையாக அமையவுள்ளது.
சீனாவின் இந்தப் பட்டுப்பாதைத் திட்டத்துடன் இலங்கை இணைந்து செயற்படும் என சின்ஹ¥ஆ செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இரு நாட்டுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவிருக்கும் சதந்திர வர்த்தக உடன்படிக்கையானது இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் முதலீடுகள் அதிகரிக்கப்படுவதை மேலும் வலுப்படுத்தும். இந்த உடன்படிக்கையானது தொழிற்சாலை, எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் உல்லாசப்பயணத்துறை போன்ற விடயங்களை உள்ளடக்கியதாகவிருக்கும்.
பொருளாதாரத்துக்கு உறுதுணை
சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும, உலகில் பிரதான பொருளாதார பலமுள்ள மூன்று நாடுகளில் இரண்டின் தலைவர்கள் இலங்கை வருவது எமது நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு பெரும் உந்துசக்தியாக அமை கிறது. கடந்த வாரம் ஜப்பான் பிரதமர் வந்து சென்றார். சீன ஜனாதிபதி நுரைச்சோலை இன்று இங்கு மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கிறார்.
நாட்டில் 365 நாட்களும் வரட்சியாக இருந்தாலும் எதுவித தடங்கலுமின்றி இனி மின்சாரம் வழங்கமுடியும். மின்வெட்டு அமுல்படுத்த வேண்டி ஏற்படாது என்ற உறுதியை வழங்க முடியும். சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் போது நுரைச்சோலை அனல் மின்நிலைய நிர்வாகம் சீனாவிடம் ஒப்படைக்கப்போவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எதுவித உண்மையும் கிடையாது. இது தொடர்பில் எதுவித அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்படவில்லை.
சீன ஜனாதிபதியின் வருகையுடன் அடிக்கல்நாட்டப்பட உள்ள துறைமுக நகரம் இலங்கை அகராதியில் புதிய வரலாறாகும். கடந்த 20 வருடங்களாக உலகில் அதிகமாக குண்டு வெடித்த நகரிலே இந்த துறைமுக நகரம் உருவாகிறது. இந்த நடவடிக்கைகள் நாட்டின் எதிர்கால பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றும் என்றார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கடந்த கால மின்வெட்டு காரணமாகவே அனல் மின்நிலையமொன்றை அமைக்க முயற்சிசெய்யப்பட்டது. முதலில் ஜப்பான் உதவியுடன் அதனை உருவாக்க திட்டமிடப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.
ஐ.தே.க ஆட்சியிலேயே பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 1/3 பகுதி இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. மேலும் ஒரு பகுதியை வழங்க முயற்சி நடந்தது. மனிதாபிமான நடவடிக்கையின் இந்தியாவில் தேர்தல் நடந்திருந்தால் ஜெயலலிதாவின் அழுத்தத்தினால் இங்கு எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் என்றார்.
இலங்கை சீன இராஜதந்திர உறவுகள்
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான தொடர்பு கிறிஸ்துவுக்கு முன்னர் 206ஆம் ஆண்டளவில் ஆரம்பமானது. சீன மக்கள் குடியரசை இலங்கை 1950ஆம் ஆண்டில் அங்கீகரித்ததைத் தொடர்ந்து இரு நாட்டுக்குமிடையிலான உறவில் திருப்புமுனை ஏற்பட்டது. 1952ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கையும் சீனாவும் ‘இறப்பர் அரசி உடன்படிக்கை’யில் கைச்சாத்திட்டன. சீனா மீது மேற்கத்தேய நாடுகளால் விதிக்கப்பட்டிருந்த வாணிபத்தடையை உடைப்பதற்கு இந்த உடன்படிக்கை உதவியது.
1957ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி முதல் இரு நாட்டுக்கும் இடையிலான இராஜதந்திர ரீதியிலான உறவுகள் ஆரம்பிக்கப்பட்டன.
சீனாவின் முன்னாள் ஜனாதிபதி 1986ஆம் ஆண்டு லீ ஸியன்யென் முதல் தடவையாக இலங்கை வந்திருந்தார். அதற்குப் பிறகு 28 வருடங்களின் பின்னர் இலங்கை வரும் முதலாவது சீன ஜனாதிபதியென்ற பெருமையை iஜின் பிங் பெற்றுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் சீனாவுக்கு ஏழு தடவைகள் விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி தனது பதவிக் காலத்தில் அதிகம் விஜயம் செய்த நாடாக சீனா காணப்படுகிறது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டம், நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம், மத்தள சர்வதேச விமான நிலையம், கட்டுநாயக்க விமானநிலைய அதிவேக நெடுஞ்சாலை, தாமரைத்தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கம் என பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் சீனாவின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
சீனாவால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நேரடி முதலீடுகள் வெளிநாட்டு செலாவணியை மாத்திரமன்றி உள்ளூர் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
15 சீன நிறுவனங்கள் முதலீட்டுச் சபையில் பதிவுகளை மேற்கொண்டு முதலீடு செய்தி ருப்பதாக முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் இரண்டாவது பெரிய வர்த்தக உறவைப் பேணும் நாடாக சீனா காணப்படுகிறது. 2013ஆம் ஆண்டு இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் 3.62 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகம் இடம்பெற்றுள்ளது.
சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவிருக்கும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.