9/12/2014

| |

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்த தயார்-த ஹிந்துவுக்கு ஜனாதிபதி பேட்டி

13வது திருத்தச்சட்டத்திலுள்ள அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவே இருக்கின்றேன். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே பேச்சுவார்த்தைக்கு வர மறுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நரேந்திர மோடியை மட்டுமன்றி எந்த நாட்டுக்கும் சென்று எவரையும் சந்திக்க முடியும். இதுதான் ஜனநாயகம் என்றும் அவர் கூறியுள்ளார். த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பிலோ ஏனைய விடயங்கள் தொடர்பிலோ தீர்மானமொன்றுக்கு வருவதாயின், அது பேச்சுவார்த்தை மூலமே சாத்திய மாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனவர்கள் குறித்து உள்ளூர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டி ருப்பதால் சர்வதேச விசாரணையொன்றுக்கு அவசியம் இல்லை. விசாரணைகள் சர்வதேசமயப்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையென்றும் ஜனாதிபதி தனது செவ்வியில் குறிப்பிட்டு ள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் ஆரம்பம் முதல் பக்கச்சார்பாகவே கருத்துக்களைத் தெரிவித்து வந்தவர். இந்த நிலையில் புதிய ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தால் அதற்கு அனுமதி வழங்கத் தயாராக விருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
அழிவடையும் கடல் வளம்
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பில் கருத்துத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, இந்திய பகுதியிலிருந்து வரும் மீனவர்கள் மேற்கொள்ளும் பொட்டம் ட்ரோலிங்
(bottom Trawling)
மூலம் கடல்வளம் முற்றாக அழிக்கப்படுகிறது. இதனை சகித்துக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறு அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் படகுகளை விடுவித்தால் அவை மீண்டும் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து அதேமாதிரியான மீன்பிடியை மேற்கொள்ளும் என்பதால் படகுகளை விடுவிப்பதில்லையென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை -இந்திய உறவு
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது. சீனாவிடமிருந்து இலங்கைக்கு என்ன கிடைக்கிறது என்று இந்தியா கவலைப்படத் தேவையில்லை. தான் இருக்கும்வரை இது தொடர்பான கவலைக்கு இடமளிக்கப்போவதில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என நம்பிக்கை வெளியிட்டிருக்கும் ஜனாதிபதி, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின்போது மோடியைச் சந்திக்க எதிர்பார்த்திருப்பதாகவும் கூறியுள்ளார். பிரதமர் மோடியை இலங்கை வருமாறு ஏற்கனவே அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், மீண்டும் அழைக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.