9/26/2014

| |

செவ்வாய்க்கிரகப் படங்களை அனுப்பியது மங்கள்யான்

செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக இணைந்த இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்ப துவங்கியுள்ளது.
பூமியிலிருந்து தொடங்கிய பத்து மாதப் பயணத்திற்கு பிறகு 'மங்கள்யான்' விண்கலன் நேற்று புதன்கிழமை செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை சென்றடைந்தது. செவ்வாய் கிரகத்தை ஆராய செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலனை செலுத்த இந்தியா மேற்கொண்ட முதல் முயற்சி வெற்றியடைந்துள்ளது.
இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டுமே செவ்வாய் கிரகத்திற்கு விண்கலனை வெற்றிகரமாக அனுப்பி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த திங்களன்று அமெரிக்காவின் சமீபத்திய விண்கலனான 'மேவன்' செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது.
புதனன்று மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா உபகரணங்கள் மூலம் 5 முறை வண்ணப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அதில் ஒரு புகைப்படம் செழுமைப்படுத்தப்பட்ட பிறகு இன்று இஸ்ரோவால் வெளியிடப்பட்டது. அந்த புகைப்படத்தை இஸ்ரோவின் தலைவர் ராதாகிருஷ்ணன் இந்திய தலைநகர் தில்லிக்கு சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்தார்.
மீதம் உள்ள நான்கு புகைப்படங்களும், செழுமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில் காணப்படும் காட்சிகள் தொடர்பில் ஆராய்ச்சிகள் துவங்கிவிட்டன என்றும் இஸ்ரோவின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். மற்ற புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.