9/28/2014

| |

கூட்டமைப்புக்குள் குழப்பம் முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்க்குமிடையில் இன்னு சனிக்கிழமை மாலை கல்முனையில் நடைபெறவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஹென்றி மகேந்திரன் டெலோ 
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பு இரு தரப்பினருக்குமிடையில் சந்திப்பு நடைபெற்றுவந்தாலும் 2012ம் ஆண்டுக்குக்கு பின்பு அப்படி நடைபெறவில்லை.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அழைப்பின் பேரில் ஏற்கனவே இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள அக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவிருந்தது.
பின்னர் அது கல்முனைக்கு மாற்றப்பட்டு, சந்திப்பு நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வருகை தராத காரணத்தினாலே சந்திப்பு பிறிதொரு தினத்திற்கு பின் போடப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பு பிறிதொரு தினத்தில் கொழும்பில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்திப்புக்கு தமிழர் எதிர்ப்பு
இதேவேளை இந்தச் சந்திப்புக்கு கல்முனை பிரதேசத்திலுள்ள தமிழர்கள் தமது எதிர்ப்புகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையிடம் வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்குமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசு கட்சி மட்டுமே கலந்து கொள்ளும் நிலை காணப்பட்டது. ஏனைய கட்சிகளான டெலோ மற்றும் ஈ. பி. ஆர். எல் எப் ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளும் நிலை காணப்படவில்லை என்று எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கல்முனையில் இந்தச் சந்திப்பு நடைபெறுவதற்கு தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் இருந்தாக டெலோ செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் கூறுகின்றார்.
கல்முனை வாழ் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டிய கடமைப்பாடு தமக்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமது கட்சித் தலைவர் சுகயீனம் காரணமாக கலந்து கொள்ள முடியாதிருப்பதால் இந்தச் சந்திப்பை பிறிதொரு தினத்தில் நடத்துவது பற்றி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தெரிவிக்கின்றார்.
''சந்திப்புக்கு எதிர்ப்பு இருந்தது என்று கூற முடியாது. இது தொடர்பில் கல்முனை வாழ் தமிழர்களிடம் மாறுபட்ட கருத்துக்கள் இருந்திருக்கலாம்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் இலங்கைத் தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எம். சுமந்திரன் மற்றும் ஈ. சரவணபவான் ஆகியோர் இன்று மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளனர்.
காலையில் மட்டக்களப்பிலும், மாலையில் அக்கரைப்பற்றிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழரசுக் கட்சியின் கூட்டங்களில் அவர்கள் கலந்து கொண்டார்கள்.