உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/25/2014

| |

ஐ.நா. வெளிநாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு பேச்சு

ஐ.நா. காலநிலை தொடர்பான உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நேபாளப் பிரதமர், கொலம்பிய ஜனாதிபதி, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலை மையகத்தில் இந்தச் சந்திப்புக்கள் இடம்பெற்றன.
நேபாள பிரதம அமைச்சர் சுசில் கொய்ரால, கொலம்பிய ஜனாதிபதி ஜூவான் மனுவெல் சந்தோஷ் கால்டெரன் மற்றும் பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோரைச் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்தார்.
எதிர்வரும் சார்க் உச்சி மகாநாடு உள்ளிட்ட பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் நேபாளப் பிரதமர் கொய்ராலாவும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 18ஆவது சார்க் உச்சிமாநாடு இவ்வருடம் நவம்பர் மாதம் காத்மண்டுவில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொலம்பியன் ஜனாதிபதி கால்டெரன் அவர்களுடனான பேச்சுவார்த்தையின் போது, தென் அமெரிக்க நாடுகளுடனான நல்லுறவைப் பலப்படுத்திக் கொள்வது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடினார். இம்மாதம் ஆரம்பத்தில் இலங்கைக்கான கொலம்பியன் தூதுவர் திருமதி மொனிக்கா லென்செட்டா மியுட்டிஸ் கொழும்பில் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களிடம் தனது நியமனக் கடிதத்தை கையளித் திருந்தார்.
பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, பொதுநலவாய விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் கலந்துரையாடினார். அதில் பொதுநலவாய அரச தலைவர்களின் மகாநாட்டின் சீராக்கம் சம்பந்தமாக இவ்வார இறுதியில் நடைபெற இருக்கும் கூட்டம் சம்பந்தமாகவும் 2015ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நீர்ப்பாசன நீர் வளங்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி ஷெனுக்கா செனவிரத்ன, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித்த கொஹன, ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம், நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.