9/11/2014

| |

சிறுமி படுகொலை – குவைத் சிட்டியில் கொடூரம்

மஞ்சந்தொடுவாய் குவைத் சிட்டியின் அப்துல் ரஹ்மான் வீதியில் வசித்து வந்த பாத்திமா சீமா (வயது 9) இன்று பிற்பகல் அயலவர் ஒருவரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சாவியா வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி பயிலும் சீமாவின் கொலை பற்றி மேலும் தெரிய வருவதாவது, இன்று பிற்பகல் மழை பெய்த வேளையில் இவரது வீட்டில் இருந்த அயலவர் ஒருவர் குடை ஒன்றைத் தருமாறு கேட்டதாகவும், சிறுமியின் உறவினரான வயது முதிர்ந்த பெண்மணி அவரைக் கொண்டுபோய் விட்டுவிட்டு குடையை எடுத்து வருமாறு சிறுமியை அனுப்பியதாகவும் தெரிகிறது.
பின்னர் சில மணி நேரங்களாக சிறுமி வராததால், அயலவர்கள் உதவியுடன் சிறுமியைத் தேடியதுடன் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த அயலவரின் (இவரது பெயர் விபரங்களை உடனடியாகப் பெற முடியவில்லை) தங்கையின் வீடு மூடிக் கிடந்ததை அவதானித்து அதை பொலிசாரும் பொதுமக்களும் உடைத்து தேடிய போது, வாயில் துணி அடைத்த நிலையில் உரப்பை ஒன்றில் சுற்றப்பட்டு கட்டிலின் அடியில் சிறுமியை கண்டுபிடித்துள்ளனர்.
உடனடியாக சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் இப்றாலெப்பை எமக்குத் தெரிவித்தார். சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா என்பது குறித்து பிரேதப் பரிசோதனையின் பின்னரே உறுதிப்படுத்த முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கருத்துக்கூறிய காத்தான்குடிப் பொலிஸ் பொறுப்பதிகாரி, குறித்த அயலவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரைத் தாங்கள் தேடி வருவதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதேச மக்கள் மிகவும் ஆத்திரமுற்ற நிலையில் சந்தேகநபரின் தங்கையின் வீட்டைச் சூழ்ந்துகொண்டுள்ளதாக தெரிகிறது.