9/18/2014

| |

ஊவா: தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

ஊவா மாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு தினங்களேயுள்ள நிலையில், தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இதேவேளை தேர்தல் நடைபெறவுள்ள பதுளை, மொனராகலை மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் இன்று முதல் தமது தேர்தல் கடமைகளை ஆரம்பிப்பதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண கூறினார்.
இன்று முதல் அரசாங்க அதிகாரிகள் தேர்தல் கடமையில் ஈடுபடுவதுடன், நாளை (19) வாக்குப் பெட்டிகள். வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டு செல்லப்படுமென பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். எம். மொஹமட் தெரிவித்தார். இந்தத் தேர்தலில் 12,500 அரசாங்க உத்தியோகத்தர்கள் கடமையாற்றவுள்ளனர்.
வெளி மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்க உத்தியோகத்தர்கள் இன்றும் (18) அதே மாவட்டத்தைச் சேர்ந்த அரசாங்க உத்தியோகத்தர்கள் நாளை (19) தமக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் தொகுதிக்கு செல்லவிருப்பதாகவும் பிரதி ஆணையாளர் கூறினார்.
தேர்தல் கடமைகளை முன்னெடுக்கவுள்ள சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்கள் நேரடியாக தெரிவத்தாட்சி அலுவலர் அலுவலகத்திற்கும் ஏனைய பணியாளர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கும் அறிக்கையிடுவர்.
வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அந்தந்த மாவட்டத்தில் நிறுவப்படுகின்ற விநியோக நிலையங்களுக்கு சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகரினால் 19 ஆம் திகதி காலை விநியோகிக்கப்ப டும். சனிக்கிழமை (20) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் தேர்தல் நடைபெறும். இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலை முதல் வாக்குப் பெட்டிகள் கையேற்கப்படும்.
முத்திரை யிடப்பட்ட வாக்குப் பெட்டிகள் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகரினால் கையளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து வாக்குப் பெட்டி கையேற்ற நிலையங்கள், வாக்கு எண்ணும் நிலையங்களாக செயற்படும். ஒவ்வொரு வாக்கு எண்ணும் நிலையத்திலும் பிரதம வாக்கு எண்ணும் அலுவலர் உட்பட 30 தொடக்கம் 40 வரையிலான அலுவலர்கள் நியமிக்கப்பட வுள்ளனர். இவர்கள் 20 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நேர முடிவின் பின்னர் உரிய நிலையத்திற்கு அறிக்கையிடுவர்.
அந்த வகையில் முதலாவது தபால் மூல வாக்கின் பெறுபேறுகள் 20 ஆம் திகதி இரவு 10 முதல் 11 மணிக்கிடையில் வெளியிடலாமென எதிர்பார்ப்பதாகவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.