உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/30/2014

| |

6 லயன்கள் புதையுண்டன: 400 பேர் மாயம்

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய  மண்சரிவு காரணமாக 6 லயன் குடியிருப்புகள் மண்ணுக்குள்  புதையுண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மீரியபெத்தையில் ஆற்று பள்ளத்தாக்கை அண்மித்தாக உள்ள 7,8,9,10,11 மற்றும் 12ஆம் இலக்க லயன் குடியிருப்புக்களே  மண்ணில் புதையுண்டுள்ளன.

7ஆம் இலக்க லயனில் 8 வீடுகளும் 8ஆம் இலக்க லயனில் 16 வீடுகளும் 9ஆம் இலக்க லயனில் 20 வீடுகளும் 10ஆம் இலக்க லயனில் 10 வீடுகளும் 11ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும் 12 ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும் இருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பால் சேகரிக்கும் நிலையங்கள் இரண்டு, வாகனங்கள் திருத்தும் இடம், இரண்டு கடைகள், மருத்துவமாது குடும்பம் தங்கியிருந்த விடுதி, சாரதியின் வீடு, சிகிச்சை நிலையம் மற்றும் கோவில் ஆகியனவும் மண்ணில் புதையுண்டுள்ளன.

இவற்றில் தங்கியிருந்தவர்களும் மேலே குறிப்பிட்ட  66 குடும்பங்களைச் சேர்ந்த  சுமார் 400 பேர் காணாமல் போயிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மண்சரிவு இன்று புதன்கிழமை காலை 7 மணிக்கும் 7.30க்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என்று  முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டமையால், பலர் பாதுகாப்பான இடங்களுக்கு முன்கூட்டியே இடம்பெயர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால், மண்ணில் புதையுண்டவர்களின் எண்ணிக்கையை சரியாக கூறமுடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அந்தக் குடியிருப்புக்களில் வசித்த பாடசாலை மாணவர்கள் பலர் இன்று காலையிலேயே மீரியபெத்த பாடசாலைக்கு சென்றுவிட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்த பலர் தங்களுடைய உடமைகளை எடுப்பதற்காக இன்று காலை அங்கு சென்றிருந்த போதே இந்த அனர்த்தத்தில் சிக்கிகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை தேடும் பணியில் முப்படையினரும் இலங்கை விமானப்படையின் விசேட ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.

அத்துடன், பதுளை, பண்டாரவளை உள்ளிட்ட பிரதான வைத்தியசாலைகளின் வைத்தியர்கள், தாதியர், மருத்துவ குழு மற்றும் நோய்காவு வண்டிகளும் அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை , மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அதில் சிக்குண்டுள்ள மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு பணித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பேரில், விமானப்படைக்கு சொந்தமான விசேட ஹெலிகெப்டர் மூலமாக ஸ்தலத்துக்கு விரைந்துள்ளார்.

அதுமட்டுமன்றி, ஜனாதிபதியின் ஆலோசகரும் ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அரவிந்த குமாரும் ஸ்தலத்துக்கு விரைந்துள்ளார்.