11/11/2014

| |

'மகிந்தவை எதிர்க்க பொது எதிரணி உருவாகிறது'

இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கான தீவிர முயற்சியில் எதிரணிகள் இறங்கியுள்ளன.
ஆளுங்கூட்டணிக்குள்ளேயே தீவிர பெளத்த தேசியவாதக் கட்சியாகவுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் பிக்குகளும் பொது வேட்பாளரை தெரிவுசெய்வதற்கான எதிரணிக் கூட்டணியின் முயற்சிகளுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாது ஒழிக்கும் வாக்குறுதியுடன் போட்டியிடும் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கக்கூடிய அரசியல்கட்சிகளையும் செல்வாக்கு மிக்க பிரபலங்களையும் ஒன்றைணைக்கும் முயற்சியில் பௌத்தர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தக்கூடிய மாதுளுவாவே சோபித்த தேரர் ஈடுபட்டுவருகின்றார்.
அதன் தொடர்ச்சியாக, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்கள் சிலருடன் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவருமான அர்ஜுன ரணதுங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி உள்ளிட்ட தலைவர்கள் கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.

சந்திரிகா வாழ்த்து

சந்திரிகா குமாரதுங்க 1994-2005 காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்தார்
மகிந்த ராஜபக்ஷவின் ஆளும் கூட்டணிக்கு தலைமை தாங்குகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க எதிரணிக் கூட்டணிகளின் பொது வேட்பாளர் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து அனுப்பியிருந்த செய்தியும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வாசிக்கப்பட்டது. 'நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாது செய்வது, 17-வது திருத்தத்துக்கு மீண்டும் உயிரூட்டுவது, ஜனநாயக ஆட்சி மற்றும் பிரஜைகளின் அடிப்படை உரிமைகளுக்கு மீள உயிரூட்டவது ஆகிய விடயங்கள் இன்று கட்டியெழுப்பப்பட்டிருக்கின்ற பொது ஒற்றுமையின் நோக்கங்களாக உள்ளன' என்று கூறியுள்ளார் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.
மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து பொது வேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள பொது கூட்டணிக்கு தனது வாழ்த்துக்களையும் சந்திரிகா வெளியிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க இந்தப் பொதுக் கூட்டணியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று கூறினார்.
'தேர்தலுக்குப் பின்னர் வீதிகளில் இறங்குவதற்குப் பதிலாக அதற்கு முன்னரே வீதியில் இறங்கி எமது உரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார் ரணில் விக்ரமசிங்க.
ரணில் விக்ரமசிங்க, 2005-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவிடம் 2 வீதத்துக்கும் குறைவான வாக்குகளால் தோல்வியடைந்தவர்.
கடந்த 2010-ம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து, பொது வேட்பாளராகக் களமிறங்கி தோல்வியடைந்த நிலையில், பின்னர் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் சிறைவாசம் அனுபவித்துவிட்டு விடுதலையான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, பொது வேட்பாளர் ஒருவருக்குள்ள சவால்கள் பற்றி இங்கு கருத்து வெளியிட்டார். 'பொது வேட்பாளராக களமிறங்குவது என்பது தூக்குமேடைக்கு போவதற்கு சமமானது. வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையிலான போராட்டம் இது. இருக்கும்போது எல்லோரும் சுற்றியிருப்பார்கள். ஆனால், வேலை பிழையாகிப் போனால் எவரும் இருக்கமாட்டார்கள், தனியாகத் தான் ஜெயில் சோறு சாப்பிட வேண்டிவரும்' என்று கூறினார் சரத் பொன்சேகா.
'அதுமட்டுமல்ல இங்கிருக்கின்ற எல்லோரும் சேர்ந்து தவறான நபரை பொது வேட்பாளராக தேர்ந்தெடுத்தால் நாங்கள் அதற்கு ஒத்துழைக்க மாட்டோம். இந்த நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என்று எங்கள் மனசாட்சி ஏற்றுக்கொள்ளும் நபரைத் தான் எங்கள் கட்சி ஆதரிக்கும்' என்றார் முன்னாள் இராணுவத் தளபதி.

தமிழ்க் கூட்டமைப்பு இன்னும் முடிவெடுக்கவில்லை

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்
முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றும் வடக்கு கிழக்குத் தமிழ்மக்களின் முக்கிய பிரதிநிதிகளுமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொதுவேட்பாளர் பற்றி இன்னும் முடிவெதுவும் எடுக்கவில்லை என்று தன்னிடம் கூறியுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இந்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார். 'இந்த தேர்தலின்போது, வடக்கிலும் சரி தெற்கிலும் சரி இனவாதத்தை தூண்டி பிரசாரம் செய்ய இடம் அளிக்கப்பட மாட்டாது என்ற நிலைப்பாட்டில் அவர்கள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்) உள்ளனர்' என்றார் மனோ கணேசன்.
பெரும்பான்மை சிங்கள மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான மகிந்த ராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில், ஏற்கனவே முஸ்லிம்களையும் மலையகத் தமிழர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதானமான அரசியல்கட்சிகள் பங்காளிகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.