11/09/2014

| |

மீண்டும் மீண்டும் நம்பிக்கைதரும் இலக்கிய சந்திப்பு தொடர்கள்

 இலக்கியா
கருத்து சுதந்திரத்தின் அடிப்படையை தன்னகத்தே கொண்டு இடம்பெற்றுவரும் இலக்கிய சந்திப்பின் 45 வது தொடர் அண்மையில் சுவிட்சலாந்து சூரிச் நகரில் இடம்பெற்று முடிந்திருக்கிறது.ஜெர்மனியில் 1988ல் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ச்சியாக இந்த அமர்வுகள் நிகழ்ந்து வருகின்றன. இலங்கைத்தமிழரின் புகலிட வாழ்வினுடைய ஆரம்ப காலங்களில் வெளியான சிறுசஞ்சிகைகளின் விமர்சன அரங்காக உருவான இந்த சந்திப்பானது ஜெர்மன் நகரங்களையே மையமாக கொண்டே நடத்தப்பட்டு வந்தது.
காலப்போக்கில் ஜெர்மனுக்கு வெளியே அமைந்திருக்கும் பிரான்ஸில் தனது 14வது சந்திப்பை 1992ம் ஆண்டு நடத்தியதை தொடர்ந்து ஒல்லாந்து, இங்கிலாந்து, சுவிஸ், நோர்வே, மற்றும் கனடாஎன்று தனது தளங்களை விரிவாக்கிகொண்டது. சிறு சஞ்சிகைகளின் சங்கமமாக வளர்ந்து வந்த இச்சந்திப்பானது படிப்படியாக அரசியல, சமூக, கலாசார, பண்பாட்டு, மற்றும் இன்னபிற துறைகள் சார்ந்து உரையாடல்களையும் விமர்சனங்களையும் சுதந்திரமாக நிகழ்த்தும் களமாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டது. இலக்கிய சந்திப்புகளில் மாக்ஸியம், தேசியம், பாஸிசம், தலித்தியம், பெண்ணியம், தலித் பெண்ணியம், பின்நவீனத்துவம், மாற்று பாலினம்- போன்றவை சார்ந்த மிக ஆழமான கருத்தியல் விவாதங்கள் இடம்பெற்றுவந்துள்ளன.இத்தகைய விவாதங்கள் தமிழ் சூழலின் கட்டுபெட்டி கலாசாரத்தில் பல அதிர்வுகளை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளன.
. கடந்த யுத்தகாலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை தொடர்ச்சியாக எதிர்த்து வந்ததோடு இதுவரைகாலமும் இடம்பெற்றுவந்த அர்த்தமற்ற யுத்தம் நிறுத்தப்படவேண்டும் என்று தமிழ் சூழலில் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்த ஒரே அமைப்பாக இந்த இலக்கிய சந்திப்பே திகழ்ந்து வந்திருக்கின்றது. இதன்காரணமாக புலிகளதும் புலிகளை அண்டி கோடீஸ்வரர்களான புலம்பெயர் யுத்தவியாபாரிகளினதும் துரோக குற்றசாட்டுக்களை இந்த இலக்கிய சந்திப்பு எதிர்கொள்ள நேர்ந்தது.
கடந்த ஆண்டு முதன்முறையாக இலங்கையில் தனது 41வது சந்திப்பை இலங்கைக்கு எடுத்து சென்றதனூடாக மேலுமொரு பரிமாணத்தை இந்த இலக்கிய சந்திப்பு எட்டியிருக்கின்றது.தாயகத்து இலக்கியவாதிகளும் புகலிட இலக்கிய வாதிகளும் சந்திக்கும் ஒரு புதிய கலாச்சாரத்தை இந்த இலக்கிய சந்திப்பு உருவாக்கியிருக்கின்றது. இந்த முயற்சியானது தங்களை மிகவும் ஆகர்சித்திருப்பதாக யாழ்ப்பாண இலக்கிய சந்திப்பில் கலந்துகொண்ட தாயகத்து இலக்கியவாதிகள் பலர் கருத்துக்களை வெளிப்படுத்தியிருதார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய வரலாற்று பின்னணியோடுதான் 1994ம் ஆண்டு தனது 18வது நிகழ்வை சுவிஸ் பெர்ண் நகரில் நடத்திய பின்னர் நீண்ட இடைவெளி கடந்து 43வது இலக்கிய சந்திப்பு அண்மையில் சூரிச் நகரில் இடம்பெற்றுள்ளது. இதன்காரணமாக பல இலக்கிய ஆர்வலர்கள் இச்சந்திப்பில் மிக ஆவலோடு பங்குகொண்டத்தை காணமுடிந்தது.சுமார் 70-100 வரையானோர் கலந்து கொண்டு இந்த இருநாள் அமர்வையும் அர்த்தமுள்ள பொழுதுகளாக்குவதில் பங்களித்தனர்.
வழமைக்கு மாறாக வெள்ளியன்று மாலையே அரங்காற்றுகை நிகழ்வுகளுடன் இலக்கியச்சந்திப்பு ஆரம்பமாகியது. இந்த சொல்கவிதை நிகழ்த்துகை என்னும் ஆற்றுகையை அமேரிக்காவிலிருந்து கலந்து கொண்ட யாழினி ட்ரீம் நிகழ்த்தினார்.சனியன்று காலை நிகழ்ச்சிகள் ஆரம்பமானபோது ஏ.ஜி.யோகராஜா வரவேற்புரையை ஆற்றினார்.அதைதொடர்ந்து புலம்பெயர் தமிழ் இலக்கிய வெளியீடுகள் மீதான ஒரு அவதான குவிப்பை பத்மபிரபாவின் நிகழ்ச்சி தாங்கிவந்தது. கடந்தகாலங்களில்பல்வேறுஇலக்கியதொகுப்புகளை வெளியிட்டும் பலனூறு நூல்களை விமர்சனம் செய்தும் வந்த இலக்கிய சந்திப்பின் இம்முறை அமர்விலும் இத்தகைய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.ஜெர்மனில் வாழும் எழுத்தாளர் ஜீவா முரளியின் லெனின் சின்னத்தம்பி என்னும் நாவல் முதன்முறையாக இங்கு வெளியிடப்பட்டது.இந்த வெளியீட்டுரையை பிரான்சிலிருந்து கலந்துகொண்ட கவிஞர் அருந்ததி நிகழ்த்தினார். அதேபோன்று பெர்லின் நினைவுகள் என்னும் நினைவோடை தொகுப்பினை சுவிஸ் தேவன் அறிமுகம் செய்துவைத்தார்.புலம்பெயர் நாடக எழுத்துருக்கள் என்னும் தலைப்பிலமைந்த நூல் ஏ.ஜி.யோகராஜாவினால் எழுதப்பட்டு சுவிஸ் சண்முகராஜாவினால் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
இலங்கையில் அதிகரித்துவரும் சிங்கள தேசியவாதத்தை ஊக்குவிக்க சிங்கள சினிமாக்கள் ஆற்றும் பங்குகளை சரவணனின் யுத்தமும் சிங்கள சினிமாவும் என்னும் தலைப்பிலான உரை நன்கே புலப்படுத்தியது.அத்தோடு சுவிஸ் நாட்டை சேர்ந்த இளம் அரசியல்வாதியும் எழுத்தாளருமான அன்றி பேர்ல் அவர்களின் வரவும் அறிமுகமும் ஐரோப்பிய வாழ்வில் அகதிகளாகிய நாம் புரிந்துகொள்ள வேண்டிய பல புதிய விடயங்களை வெளிக்கொணர்ந்ததுஎனலாம். இவ்வாறாக சனியன்று மாலைபொழுது தமயந்திஇதில்லை நடேசன் ஆகியோரின் நாட்டுக்கூத்தின் நர்த்தனங்களை ரசித்துக்கொண்டு விடைபெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் இந்தியாவில் இருந்து வருகைதந்த கவிஞர் மதிவண்ணனின் அமர்வுடன் ஆரம்பமானது.தமிழ் நாட்டில் வாழுகின்ற அருந்ததியர் வரலாறு பற்றிய ஒரு முழுமையான பார்வையை மதிவண்ணன் முன்வைத்தார்.இந்த நிகழ்வு கூடிய விவாதங்களையும் உரையாடல்களையும் கேள்விகளையும் கொண்டதாக மாறி இலக்கியசந்திப்பினை கனதியானதொன்றாக மாற்றுவதில் கூடிய பங்கு வகித்தது.அதனையொட்டியதாக இடம்பெற்ற சாதியமும் புதிய பரிணாமமும் என்னும் நிகழ்வும் அதன்தொடரான விவாதங்களுக்கு இட்டுச்சென்றது.
சுவிஸ் தமிழர் வாழ்வும் அவலமும் பற்றிய கருசனைகொள்ளலை பளை ராஜனின் தகவல்களும் புள்ளி விபரங்களும் சார்ந்த உரை ஏற்படுத்தியது. பெண்களுக்கான வெளியும் காலமும் பற்றிய தத்துவார்த்த உரையாடலை லண்டனில் இருந்து வந்த ஹரி இராஜலக்சமி தொடக்கிவைத்து ஆரோக்கியமான விவாதமொன்றை தோற்றுவித்தார். அதைதொடர்ந்து தர்மினி, உமா, நிர்மலா, விஜி போன்ற பெண்ணியவாதிகள் இணைந்து திறந்த வெளி உரையாடல் ஒன்றை வளர்த்தெடுத்தனர்.
இவ்வாறாக பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும் கலைஞர்களும், செயற்பாட்டாளர்களும் விமர்சகர்களும் புத்திஜீவி களும் கலந்துகொள்ளும் இந்த இலக்கியசந்திப்பு தனது அடுத்த தொடரை நோர்வேயில் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. அதனையடுத்து இலங்கையில் மட்டக்களப்பில் 45வது இலக்கிய சந்திப்பை நடத்துவதெனவும் முடிவாகியது.
புகலிட சமுகத்தின் உயிர்ப்பினை வெளிக்காட்டும் இத்தகைய சந்திப்புக்கள் மென்மேலும் நிகழவேண்டும்.நீண்ட கால இடைவெளிக்கு பின் (1994)மீண்டும் சுவிசில் இச்சந்திப்பு சிறப்பாக இடம்பெறுவதற்கு முன்னின்று உழைத்த  விஜயன், லோலன், பிரபா, விந்தன், யோகராஜா இராஜன், மற்றும் தோழர்கள் பாரட்டுக்குரியவர்கள் ஆகும்

நன்றி தேனீ