சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் பேரணி நடத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) இயக்கத்தின் ஆண்டுவிழா மற்றும் ராஜேந்திர சோழனின் 1000-வது முடிசூடிய ஆண்டு விழாவையொட்டி, ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தின் 7 முக்கிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்ட இந்த பேரணியால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக்கூடும் என்று கருதி காவல்துறை பேரணிக்கு அனுமதி மறுத்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம், பேரணிக்கு அனுமதி பெற்றது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு, ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மாதிரி உடை அணிந்து செல்லும் இப்பேரணியை அனுமதிக்க முடியாது என்று காவல்துறை கூறியது. ஆனால் பேரணி நடத்துவதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் உறுதியாக இருந்தனர். இந்நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று மாலை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பாக குவிந்தனர்.
எழும்பூர் லட்சுமிபதி ருக்மணி சாலையில் அவர்கள் பேரணியாக செல்ல முயன்றபோது, காவல் துறையினர் அவர்களை கைது செய்து 7 திருமண மண்டபங் களில் தங்கவைத்தனர். இந்த பேரணியில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கைது செய்யப்பட்டார். கைதானவர்கள் அனைவரும் நேற்று இரவே விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சட்ட ஆலோசகர் ரபு மனோகரன் கூறுகையில், “உயர் நீதிமன்ற உத்தரவில் உள்ள 20-வது பத்தியில், நாங்கள் சீருடை அணிந்து பேரணி செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையினரோ சீருடையுடன் பேரணி செல்லக்கூடாது என்று கூறி அனுமதி மறுத்தனர். தொடர்ந்து, நீதிமன்ற தீர்ப்பின் நகலை உள்துறை செயலர், தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு அளித்தோம். அதையும் மீறி அவர்கள் எங்களை கைது செய்துள்ளார்கள். காவல் துறையினரின் இந்த நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்” என்றார்.
மதுரை
இதேபோன்று மதுரையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் உட்பட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோட்டில் 800 பேர், கிருஷ்ணகிரியில் 704 பேர், தருமபுரியில் 84 பேர், சேலத்தில் 650 பேர், நாமக்கல்லில் 300 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.