12/15/2014

| |

செங்கலடி செல்லம் தியேட்டர் மோகனின் அரசியல் நாடகம்

 மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச வர்த்தகர் சங்கத் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளருமான கணபதிப்பிள்ளை மோகன் என்பவர் பிள்ளையான் குழுவினரால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இது பிரபல்யமடைவதற்கான நாடகம் என ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்தி விஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட மோகன் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் எதிரணி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு சுய விளம்பரத் திற்காக இந்த நாடகத்தை அரங்கேற்றியுள் ளமை அம்பலமாகியுள்ளது.
இதுகுறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் கணபதிப்பிள்ளை மோகன் ஆகியோருடன் தொடர்புகொண்டு கேட்டபோது நீண்டகால நட்பின் அடிப்படையில் சந்தித்து பேசியதை கடத்தல் என சிலர் சித்தரிக்க முற்படுவதாக கூறினர்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு செங்கலடியிலுள்ள மோகனின் வீட்டிற்கு வந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) குழுவினர் குடும்ப உறவினர்களுடன் சிநேகபூர்வமாகப் பேசிவிடடு இருவரும் ஒரே வாகனத்தில் மட்டக்களப்பு அலுவலகத்திற்குச் சென்று அளவளாவியுள்ளனர். தற்போதைய நிலையில் இவ்விருவரும் ஜனாதிபதி தேர்தலுக்காக எதிரும் புதிருமான பிரசார பணிகளில் ஈடுபடுவதனால் இந்நிகழ்வு கடத்தல் சம்பவமாக சித்தரிக்கப்பட்டது.
மோகன் அழைத்துச் செல்லப்பட்டு சில நிமிடங்களில் அவரது மனைவி எறாவூர்ப் பொலிஸ் நிலையத்திற்கு வந்தவேளை, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மோகனுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியதுடன் மோகனின் மனைவிற்கும் பேசும் சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தார். அப்போது கடத்தப்பட வில்லை சுமுகமான சந்திப்பு இடம் பெறுவதாகக் கூறினார். இதனால் பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட வில்லை. அதிலிருந்து சில மணி நேரத்தில் மோகன் வீடு திரும்பியுள்ளார்.
இது குறித்து க. மோகன் தெரிவித்ததாவது :-எங்கள் இருவருக்குமிடையில் பல வருடகால நட்பு இருக்கிறது. நான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் ஆரம்பகாலத்திலிருந்து முக்கியஸ்த ராகவிருந்தேன். பின்னர் எமக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகினேன். தற்போதைய சூழ்நிலையில் இருவரும் வெவ்வேறு கட்சிகளுக்காக பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதனால் சந்திரகாந்தன் என்னுடன் சுமுகமான சந்திப்பில் ஈடுபட்டு தம்முடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு நான் இணக்கம் தெரிவிக்காது வீடு திரும்பினேன் என்றார்.
இச்சம்பவம் தொடர்பாக சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் கேட்டபோது, எமக்குள் நட்பு ரீதியாக இடம்பெற்ற சந்திப்பை சிலர் அரசியல் காரணங்களுக்காக கடத்தல் சம்பவமாக சித்தரித்துள்ளனர் என்றார்.