12/12/2014

| |

சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே அரசியலமைப்பை மாற்றுவேன்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன ணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் அநுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.
பிரதமர் டி.எம்.ஜயரட்ண அமைச்சர்கள் சுசில் பிரேமஜயந்த, திஸ்ஸ கரலியத்த, தினேஷ் குணவர்த்தன, அநுர பிரியதர்ஷனயாப்பா, டி.யூ.குணசேகர, திஸ்ஸ அத்தநாயக்க, பவித்திரா வன்னியாராச்சி, ஜீ.எல்.பீரிஸ், விமல் வீரவன்ச உள்ளிட்ட பெருமளவான அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இலட்சக்கணக்கில் மக்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்று கையில்,
ஒவ்வொரு நாளும் காலையில் விடிந்ததும் அவர் போகிறார் இவர் வருகிறார் என்று மக்களைக் குழப்பும் செயற்பாடே நடக்கிறது. மக்கள் அதை நம்பி குழம்பத் தேவையில்லை.
இந்த மோசமான வெய்யிலிலும் மழையிலும் நெரிசல்பட்டுக்கொண்டு மக்கள் இலட்சக்கணக்கில் திரண்டிருப்பது எமது வெற்றியை உறுதிப்படுத்துகிறது. இங்கு மக்கள் எமது கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். எதிரணிக்கு நமது எதிர்ப்பை இதன் மூலம் வெளிப்படுத்துகின்றோம்.
கண்டியில் நடைபெற்ற எதிரணியின் கூட்டத்தில் எழுப்பப்பட்ட பிரச்சினைக ளுக்கு நான் இங்கு பதில் சொல்லப் போவதில்லை. அதற்குப் பதில் சொல்லி யாயிற்று. மீண்டும் பதில் சொல்லத் தேவையில்லை. பிறரை இகழ்ச்சிசெய்து சேறுபூசி களங்கம் ஏற்படுத்தி அரசியல் செய்ய முடியாது.
ஜனாதிபதி தேர்தல் என்பது மக்கள் கருத்துக்கணிப்பு அல்ல. இன்று சிலர் அரசியலமைப்பை மாற்றுவது பற்றியே பேசுகின்றனர். என்னால் அரசியலமைப்பை மாற்ற முடியும் எனினும் மக்கள் விருப்பத்திற்கேற்ப அதை செய்ய முடியும்.
இது இந்த நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாகும். இது மிக முக்கியமானது. சொல்வதற்கு எதுவும் இல்லாதவர்களே எதை எதையோ பிதற்றுகின்றனர்.
நாடு அபிவிருத்தியடையவில்லை என்று எவராலும் சொல்ல முடியாது. மக்களுக்கு மின்சாரம் வழங்கவில்லை. வீதிகள் அமைக்கப்படவில்லை என எவருக்கும் கூற முடியாது. யுத்தத்தைத் தோற்கடிக்கவில்லையென்று எவராலும் கூற முடியாது. புலிகள் இன்னமும் உள்ளனர் அவர்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு ஒளிந்து வாழ்கின்றனர். காலத்துக்கு காலம் வெளியே வந்து எமக்கு எதிராக செயற்படுகின்றனர். இப்போது எம்மை சர்வதேச யுத்த நீதிமன்றத்தில் ஏற்றப்போவதாகக் கூறுகின்றனர்.
நேற்று மனித உரிமைகள், ஆணைக்குழு இவ்வாறு கூறியுள்ளது. எமது இராணுவத்தினர் பற்றியும். யார் இராணுவத்தளபதி என்றும் எவ்வாறான கட்டளைகளை அவர் பிறப்பிக்கின்றார் என்றும் கேட்கின்றனர். படைத்தளபதி யார் என இனிகேட்போர், எமது படையினர் ஒருபோதும் சிவில் மக்களைப் படுகொலை செய்யவில்லை என்பதை நான் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன். அதனால் எமது எந்த படையினரையும் யுத்த நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை.
நாம் இம்முறை வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒன்றரை இலட்சம் இளைஞர்களுக்கு தொழில் வழங்க தீர்மானித்துள்ளோம். அடுத்த வருடத்தில் அதனை வழங்குவோம். டொலர் கணக்கில் செலவழிக்கின்றனர். எனினும் நாம் இதே எம்மோடுள்ள திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எச்செலவும் கொடுக்க வில்லை. ஒரு கோப்பி கோப்பையைக் கொடுத்து பேசினோம் அது மட்டுமே. கோப்பியை வழங்கியதும் ரணில் விக்ரமசிங்கவையும் எடுக்க முடியும். அது எம்மால் முடியும்.  என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.