12/08/2014

| |

மைத்திரியின் அணியிலுள்ள ஆபத்தான பேரினவாத சக்திகள்

ஜனாதிபதித் தேர்தல் : சமரசத்துக்கும் சரணடைவுக்கும் உள்ள இடைவெளி - என்.சரவணன் 


சமகால இலங்கை அரசியலில் காத்திரமான அரசியல் அழுத்தக் குழுவென்றால் அது பேரினவாத சக்திகள் தான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுவரும் ஒன்று. பேரம்பேசும் ஆற்றல் கூட தம் வசமே உள்ளது என்று மார்தட்டி பறைசாற்றும் அளவுக்கு அது உண்மை. தீர்மானகரமான அரசியல் சூழல்களில் அவர்கள் தமது பாத்திரத்தை வெற்றிகரமாக ஆற்றியிருக்கிறார்கள். அரசை இனவாத திசையில் வழிநடத்தவும், வழிதவறிப்போனால் எச்சரிக்கவும் அவர்களால் முடிந்தது.

குறிப்பாக இதுவரை ஜாதிக ஹெல உறுமய அரசின் பங்காளிக்கட்சியாக தாமும் அதிகாரத்தில் இருந்தபடி தமது பேரினவாத இலக்கில் பாரிய வெற்றிகளை பெற்றார்கள். யுத்தம் முடிவுற்றதன் பின்னர் அவர்கள் இரண்டாம் கட்ட போரை ஆரம்பித்துவிட்டதாக அறிவித்தார்கள். தமிழர்களின் நியாயபூர்வமான அரசியல் கோரிக்கைகளை வலிமை இழக்கச்செய்து முற்றிலும் அரசியல் அங்கவீனத்துக்கு உள்ளாக்குவதே அது. அந்த இரண்டாம் கட்டப் போருக்கு இந்த ஜனாதிபதித் தேர்தலை எப்படி சாதகமாக்கிக் கொள்ளலாம் என்பதிலேயே தற்போதைய பேரினவாதத்தின் வியூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தேர்தல் அணிகளில் பேரினவாத அணி எது என்றால் துணிந்து கூறலாம், அது மைத்ரிபால அணிதான் என்று. இலங்கையில் அதி முக்கியமான பேரினவாத தலைமை சக்திகள் அவரோடு தான் இணைந்திருக்கின்றன. (பெட்டி செய்திகளை பாருங்கள்) இதுவெறும் ஆட்சிமாற்றத்துக்கானதும், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்குமான கூட்டு மட்டுமே என்றும், நாட்டின் சகல பிரச்சினைகள் குறித்தும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கமுடியாது என்று கூறினார்கள் சரி. ஆனால் அதெப்படி அந்த 36 அமைப்புகளும் சேர்ந்து செய்த ஒப்பந்தத்துக்கு புறம்பாக தனியான ஒப்பந்தம் ஜாதிக ஹெல உறுமயவோடு கைச்சாத்திடப்பட்டது.

அதுவும் ஒற்றையாட்சியையும் பௌத்த சாசனத்தையும் பாதுகாப்பது, ஜனாதிபதியோ, ஏனைய இராணுவ அதிகாரிகளோ போர்குற்றவாளிகளாக ஆக்கப்பட்டால் அதற்கு எதிராக செயற்படுவது உள்ளிட்ட விடயங்களை சுப நேரம் பார்த்து மைத்திரிபாலவிடம் தனியாக கையெழுத்து வாங்கிக்கொண்டது ஏன். இதற்கு மனோ கணேசன், அசாத் சாலி, விக்கிரமபாகு கருணாரத்தன போன்றோரின் பதில் என்ன. “மேடையில் கூறியிருக்கிறேன்” போன்ற பதில்கள் பட்டறிவுக்கு போதுமானதா?

முக்கிய தேர்தல் ஒன்றில் “இனப்பிரச்சினைத் தீர்வு” நிகழ்ச்சி நிரலிலேயே உள்ளடக்கப்படாத ஒரு தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். இன்று தமிழர் பிரச்சினையை கிஞ்சித்தும் கணக்கிலெடுக்காத ஒரு அரசியல் நிலையை தோற்றுவித்தது இதே இனவாதிகளின் வெற்றியில்லையா. இந்த தேர்தலில் குறைந்த பட்சம் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலமாவது சிறுபான்மை இனங்களின் உரிமைகளை உறுதிசெய்யும் அம்சங்களை உறுதிசெய்ய முடியுமா. நிச்சயம் முடியாது என்றே கணிக்க முடிகிறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக விஞ்ஞாபனங்களில் தமிழ் மக்களின் அபிலாசைகள் சிறுத்து சிறுத்து இன்று சமாதிசெய்யும் நிலைக்கு வந்து விட்டதை எவராலும் மறுக்க முடியாது. கடந்த காலங்களில் சுயநிர்ணய உரிமை குறித்தும், சமஷ்டி குறித்தும், 13 ப்ளஸ் குறித்தும் விஞ்ஞாபனங்களில் பேசப்பட்டிருக்கிறது. இன்று மாகாண சபைகளை ஜனநாயக ரீதியில் நடத்தவிடு என்று கூட கோர முடியாத நிலை எப்படி ஏற்பட்டது. 

இனப்பிரச்சினை குறித்து ஒன்றையும் இப்போதைக்கு பேச வேண்டாம் மகிந்தவை தோற்கடிப்பதே நமது ஒரே குறிக்கோள் என்றவர்கள் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எந்தவித உத்தரவாதத்தையும் தர மறுத்திருக்கிறார்கள். ஆனால் ஜாதிக ஹெல உறுமயவின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டது எவ்வாறு. ஹெல உறுமய தமது இலக்கை விட்டுகொடுக்கவில்லையே. அவர்கள் “ஒற்றையாட்சியை பாதுகாப்பது” என்கிற வரைவிலக்கணத்துக்குள் சகல இனவாத பூதத்தையும் அடக்கி வைத்திருக்கிறார்கள் என்பது  பட்டறிவுக்கு நன்றாகவே தெரியும். தற்போதைய மாகாண சபை கூட அவர்களின் அர்த்தத்தில் ஒற்றையாட்சிக்கு ஆபத்தானது தான். மாகாணசபையை இல்லாதொழிக்கவும், குறைந்தபட்சம் அதனை செயலிழக்க செய்வதற்காகவும் அவர்கள் எத்தனை முயற்சிகளை செய்து வந்திருக்கிறார்கள் என்பது ரகசியமல்ல. 19வது திருத்த சட்டத்தின் மூலம் அந்த இலக்கை அடைய மேற்கொண்ட முயற்சியை அரசாங்கம் ஆதரிக்காததே அரசாங்கத்தை விட்டு வெளியேறியதற்கான முதன்மை காரணங்களில் ஒன்று.

இப்போதைய பிரதான அணிகள் இரண்டுமே இதுவரை பரஸ்பர அரசியல் எதிரிகளாக இருந்தவர்களின் அணிசேர்க்கைகள் தான். இன்னார் இருப்பதால் நான் இருக்கமாட்டேன் என்று எவரும் அடம்பிடிக்க முடியாத சந்தர்ப்பவாத கூட்டணிகளே. கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் டீ.என்.எல் தொலைக்காட்சியில் (ஜனஹண்ட நிகழ்ச்சி 16.11.2009) நடந்த விவாதத்தில் சரத் பொன்சேகா அணி குறித்து ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க கூறிய கருத்தை இங்கு நினைவூட்டலாம்.

இப்படி சொன்னவர் அதே அணியுடன் இன்று கூட்டு வைத்தது தமது லட்சியத்தை எப்படியும் நிறைவேற்றுவது என்கிற இலக்கில் தான். அதன்படி கையெழுத்தையும் வாங்கியாயிற்று. ஆனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக ஆரம்பத்திலிருந்து உழைத்த மனோ கணேசன், அசாத் சாலி போன்றவர்கள் வெறும் போடுதடி மட்டும்தானா. அல்லது மைத்ரிபால பற்றி ரணில் கூறியது போல வேலை முடிந்ததும் கழற்றி எறியப்படப்போகும் ஆணுறைகளா.

இது சமரசமா, சரணாகதியா, சந்தர்ப்பவாதமா என்பதை காலம் பதில் சொல்லட்டும். ஆனால் இந்த நிபந்தனையற்ற விட்டுகொடுப்பும், அனுசரிப்பும் அந்த நிலைக்கு தள்ளிவிடவும் கூடும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வதற்காக விஹாரமகாதேவி பூங்காவில் நடத்தப்பட்ட கூட்டத்திற்கு வைக்கப்பட்ட தலைப்பு “பொறுத்தது போதும், மாற்றுவோம்” என்பதே. இந்த முழக்கம் தமிழர், முஸ்லிம் மலையகத்தவர்களுக்கு சொந்தமானதில்லையா. பொறுத்தது யார்... எதை மாற்றப் போகிறார்கள் என்பதே இப்போதுள்ள கேள்வியும் அச்சமும்.

மைத்திரிபால அணியிலுள்ள இனவாத அமைப்புகள்.
மாதுலுவாவே சோபித்த தேரர்
அன்று மாகாண சபை முறைமைக்கு எதிராக போராடி சிங்கள பௌத்தர்கள் மத்தியில் பேர் பெற்ற மிகவும் முக்கியமானவர். நாட்டின் சகல பௌத்த சக்திகளாலும் போற்றப்படும் சிரேஷ்ட பௌத்த துறவி. தமிழர்களுக்கு எதிராக சிங்கள பௌத்த தரப்புக்கு 80களில் தலைமை தாங்கியதும் அவர்தான். யுத்தத்திற்கு ஆதரவாக இருந்தவர். இனவாத அமைப்புகளாக 80களிலிருந்து பேர்பெற்ற “ஜாதிக்க சங்க சபா”, “சிங்கள பலமண்டல”, “தாய்நாட்டை பாதுகாக்கும் இயக்கம்” போன்றவற்றின் தலைவராக இருந்தவர். இவர் 1987இல் கொழும்பு புறக்கோட்டையில் பல்லாயிரக்கணக்கான பிக்குமார்களை வீதியில் இறக்கி சிறிமா பண்டாரநாயக்க போன்றோரையும் சேர்த்துக்கொண்டு மாகாணசபை முறைக்கு எதிராக நடத்திய முற்றுகை போராட்டம் சிங்களவர்கள் மத்தியில் பிரசித்திபெற்றது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவர் நோர்வே அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஒஸ்லோ வந்திருந்த போது அவரை Grand Hotelஇல் சந்தித்து உரையாடினேன். அப்போது அவர் நிறைய மாறியிருந்தது ஆச்சரியமாக இருந்தது. ஜே.வி.பி யைக் கூட இனவாத அமைப்பு என்று குற்றம்சாட்டினார். அந்த அளவுக்கு அவரின் இனவாதம் தணிந்திருந்ததாக நம்பினேன். ஏன் இப்போது கூட அவர் ஒரு நியாயவாதியாக நம்பப்படுகிறார். கடந்த மார்ச் 7 அன்று ராவய பத்திரிகைக்கு அவரே அளித்திருந்த பேட்டி அவர்; அவரது இடத்தில் உறுதியாகத்தான் இருக்கிறார் என்பதை உறுதி செய்தது. “மாகாண சபையை கலைத்துவிடலாம். அதற்குப் பதிலாக மாவட்ட சபையை அறிமுகப்படுத்தலாம்” என்கிறார் அந்த பேட்டியில்.

ஜாதிக ஹெல உறுமய
கடந்த இரண்டு தசாப்தத்துக்கு மேலாக சிங்கள பௌத்த தரப்புக்கு பாரிய
தலைமை கொடுத்து இயக்கி வரும் ஒரு லட்சிய அமைப்பு. பாராளுமன்றத்தில் சிறிய கட்சியானாலும் நாட்டின் காத்திரமான அழுத்தக்குழு என்பதை தொடர்ந்தும் நிரூபித்து வந்திருக்கிறது. பெரும்போக்கு அரசியல் நிகழ்ச்சி நிரலிலிருந்து சிறுபான்மை இன கோரிக்கைகளை நீக்குவதில் பாரிய வெற்றியீட்டிய அமைப்பு. இன்று நாம் அதிகம் பயப்பட வேண்டிய அமைப்பே இதுதான். சென்ற மாதம் இரண்டு வாரங்களாக இந்த கட்சி பற்றி விலாவாரியாக எழுதியிருந்தேன்.

ஜாதிக சங்க சம்மேளனய

புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு எதிராகவும், சமஸ்டிக்கு எதிராகவும், அரசியல் தீர்வு யோசனைகளை எதிர்த்தும் பல பௌத்த அமைப்புகளை அணிதிரட்டி 23.03.2001 உருவாக்கப்பட்ட “குடை” அமைப்பு இது. ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் ரதன தேரரின் தலைமையில் உருவாக்கப்பட்டாலும் முன்னணி தலைவர்களாக அவர் இருக்கவில்லை. ஆனால் பின்னணியிலிருந்து இயக்கியவர்கள் அவர்கள் தான். மதுபான ஒழிப்பு, புகைத்தல் ஒழிப்பு, இந்துகோவில்களில் மிருகபலியை தடுப்பது, சூழலியல் பிரச்சினை, ரிஸான நபீக் விடயம் என இன்னும் பல பொது விடயங்களில் வீதியில் இருந்து போராடினாலும் அவர்கள் சாதனையாக கருதுவது இனப்பிரச்சினையை இராணுவ தீர்வின் மூலம் அடக்கியது, தாம் நினைத்தபடி அதிகாரப்பகிர்வு யோசனைகளை செயலிழக்கசெய்தது போன்றவற்றையே. “எங்கள் தேசியவாதத்தை இனவாதம் என்று பரப்புரை செய்த மார்க்சிஸ்டுகளை கூட தேசியவாத அணிக்குள் கொண்டுவந்தது நாங்களே” என்று ஜாதிக சங்க சபாவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அறிவித்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் பொதுபல சேனாவுடன் கைகோர்த்து பணியாற்றியிருப்பதையும் செய்திகள் உறுதிபடுத்துகின்றன. குறிப்பாக முஸ்லிம்கள் விடயத்தில். அரசாங்கம் மூன்றில் இரண்டு பலத்தை பாவித்து 13வது திருத்தச்சட்டத்தை இல்லாது செய்யும்படி தங்களுடன் இணைந்து நிர்ப்பந்திக்கும்படி கடந்த வருடம் ஜூலை 18 அன்று அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்து கோரியிருந்தனர்.

தாய்நாட்டு மக்கள் கட்சி
இந்த கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார அமைச்சராகவும் இருந்தவர், ஜனாதிபதி மகிந்தவின் ஆலோசகராக பணியாற்றி இரு வருடங்களுக்கு முன்னர் ராஜினாமா செய்துகொண்டவர். இன்று வெளித்தோற்றத்தில் ஒரு சாதாரண கட்சியைப் போல தோற்றமளித்தாலும் அதன் நதிமூலம், ரிசிமூலத்தை தேடிப்பார்த்ததில், இந்த பெயரின் உள்ளே இருப்பது பேர்பெற்ற சிங்கள இனவாத கட்சியான “சிங்களயே மஹா சம்மத்த பூமி புத்திர பக்க்ஷய” என்பது தெரிய வந்தது. 2012 ஓகஸ்டில் கட்சியின் பெயரை மாற்றியிருக்கிறார்கள். இனவாதியாக பேர்பெற்ற இதன் தலைவர் ஹரிச்சந்திர விஜேதுங்க பெயர் மாற்றப்பட்ட தற்போதைய கட்சியின் ஆலோசகராக ஆக்கப்பட்டுவிட்டார். அவரே இந்த பெயர் மாற்ற விவகாரம் குறித்து ஒப்புக்கொண்ட செய்திகளும் காணக்கிடைக்கிறது. ஹேமகுமார வேறு யாருமல்ல வாசுதேவ நாணயக்காரவின் உடன்பிறந்த சகோதரர். சகோதரனின் அரசியலுடன் ஒருபோதும் உடன்பட்டதில்லை என்று சென்ற வருடம் வாசுதேவ அறிவித்திருந்தார்.
05.08.1990 பூமி புத்திரர் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அதன் தலைவராக இருந்த
ஹரிச்சந்திர விஜேதுங்க கட்சியின் சார்பாக 1994, 1999 ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டவர். அதிகாரப் பகிர்வுக்கு எதிராகவும், மாகாண சபை முறைக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்தது மட்டுமல்ல, அவர்களின் இந்திய எதிர்ப்புவாதம் மலையக மக்களுக்கு எதிராக திருப்பியது. மலையக மக்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டியவர்கள் “கள்ளத்தோணிகள்” என்று பகிரங்கமாக பேசியும் எழுதியும், பிரசுரங்கள் வெளியிட்டும் வந்துள்ளனர். குறிப்பாக 90களில் இவர்களின் அரசியல் பாத்திரம் காத்திரமானது.

நவ சிஹல உறுமய
இந்த அமைப்பு சிறுபான்மை அமைப்புகளோடும், இடதுசாரி அமைப்புகளோடும் சேர்ந்து செயல்படுவதையும், தேர்தல்களில் போட்டியிடுவதையும் அவதானிக்க கூடியதாக இருந்தாலும் உலக சோஷலிச வலைத்தளம் இந்த அமைப்பை ஒரு இனவாத அமைப்பாகவே இனங்காட்டுகிறது.

ஐக்கிய பிக்குகள் முன்னணி
“இப்படி ஒரு அராஜக அரசை தூக்கியெறியப்படும் வரை போராடுவோம். அதற்குள் சாக நேரிட்டால் அடுத்த பிறப்பில் பேயாக வந்தேனும் மகிந்தவை பழிவாங்குவேன்”என்று இதன் உப தலைவர்  மாலபே சீலரதன தேரர் மைத்ரிக்கு ஆதரவாக கந்துருவெலவில் 02.12.2014 இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்து சர்ச்சைக்குள்ளானவர்.

மாதுலுவாவே சோபித்த ஹிமியை பொது வேட்பாளராக ஆக்கும்படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழுத்தம் பிரயோகித்து வந்த அமைப்பு இது. இலங்கையில் பிக்குமார்களின் ஆட்சியையும் அதிகாரத்தையும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. “1956, 1965, 1977, 2005 போன்ற காலங்களில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னணியில் பிக்குமார்களே பெரும்பங்கு ஆற்றியிருந்தனர். அதை தொடர்ந்தும் செய்வோம்” என்று ஜனவரி 2ஆம் திகதி நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் அதன் செயலாளர் போபிட்டியே தம்மிஸ்ஸற தேரோ தெரிவித்திருந்தார். உண்மை தான் 1956இல் பண்டாரநாயக்கவை பதவியில் அமர்த்தியதன் பின்னணியில் பாரிய பங்காற்றிய அமைப்பு இந்த ஐக்கிய பிக்குகள் முன்னணி. பண்டா - செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிய தூண்டியதும் இதே அமைப்பு தான். அந்த முன்னணியை சேர்ந்த புத்த ரக்கித்த தேரோ; பண்டாரநாயக்க கொலை சூத்திரதாரி என்கிற கதை நாமறிவோம். பிற்காலத்தில் இந்த கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
நன்றி - தினக்குரல் 07.12.2014